Saturday, July 9, 2011

குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு இம்மாதம் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவு வெளியிடப்படாததால், ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக இருக்கும் 4,500 காலிப் பணியிடங்களுக்கு இந்த மாதம் ஜூலை 30 ஆம்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்விற்கு இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூன் 19ஆம் தேதி நடக்கவிருந்த இந்தத் தேர்வு, பல்வேறு காரணங்களால் ஜூலை 3ஆம் தேதிக்கும் ஒத்திப்போடப்பட்டது. பிறகு கூடுதலாக பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டதால், தேர்வு ஜூலை 30ஆம் தேதிக்கும் மாற்றியமைக்கப்பட்டதோடு, புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. வழக்கமாக குரூப் 2 தேர்வு நடத்தும்போது, அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டப் பிறகுதான், புதிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும். இதுதான் வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படாத சூழலில் புதிதாக இம்மாதம் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வு, பழைய மாணவர்களை கவலையடைய செய்துள்ளது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று இறுதிப்பட்டியலை எதிர்கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள், ஓர் அலசல்:
சத்யா (கடலூர்): 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை 2008ஆம் ஆண்டு எழுதியிருக்கிறேன். முதல் முறையாக நான் எதிர்கொண்ட தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். என் முழு நேர வேலையே டி.என்.பி.எஸ்.சி.க்கு தயாராவதுதான். நவம்பர் மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததும், உற்சாகமாக படிக்க ஆரம்பித்தேன். 2010 ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1300 காலிப் பணியிடங்களுக்கு. 6 லட்சம் பேர் தேர்வு எழுதினோம். அதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, 2011 ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். நேர்முகத்தேர்வை மொத்தம் 2600 பேர் எதிர்கொண்டோம். நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வாணையம் வெளியிட்டது. மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, பதவிப்பட்டியல் அதாவது இறுதிப் பட்டியல் வெளியாக வேண்டும். அப்படித்தான் கடந்த முறைகளில் நடந்திருக்கிறது. ஆனால், மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதிப் பட்டியலை வெளியிடாமல் டி.என்.பி.எஸ்.சி. காலம் தாழ்த்துகிறது. நான் எடுத்த மதிப்பெண்ணுக்கு பதவி கிடைக்குமா கிடைக்காதா? கிடைக்கும்பட்சத்தில், என்ன மாதிரியான பதவியாக அது இருக்கும் என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கிறது. ஒரு வேளை கிடைக்காமல் போனால், என்ன செய்வது என்ற நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்வையும் எழுதவிருக்கிறேன். என் நிலைதான் நேர்முகத் தேர்வை எதிர்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் என்றார் தேர்வு முடிவை எதிர்நோக்கும் சத்யா.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மாணவர்: பட்டப் படிப்பு முடித்ததில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிச்சிட்டு வர்றேன். இதுவரை இரண்டு தடவை குரூப் 1 தேர்வு எழுதியிருக்கிறேன். இரண்டு தடவையும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, மெயின் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகத் தேர்வில் மதிப்பெண் குறைந்துபோனதால், இறுதிப் பட்டியலில் தேர்வு பெற முடியாமல் போய்விட்டது. அதனால், இந்தத்தேர்வு முடிவை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இம்மாதம் 15ஆம் தேதி வெளியிடப்போவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இறுதிப்பட்டியல் வெளியிடுவதைப் பொறுத்துதான் நான் வி.ஏ .ஓ. பதவிக்கு செல்லவேண்டுமா? அல்லது குரூப் 2 பதவிக்கு செல்ல முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வையும் எழுதவிருக்கிறேன்.
வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியான உடனேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற தொடங்கிவிடும். அதற்கு நான் ஒப்புகை கடிதம் அளித்துவிட்டாலே, நான் வி.ஏ.ஓ. பதவிக்கு சேர்ந்துவிட்டதாகவே கருத்தில் கொள்ளப்படும். இந்தச் சூழ்நிலையில் நான் பணியில் சேர்ந்தபிறகு குரூப் 2 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட்டு, அதில் எனக்கு நான் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்பட்சத்தில், கண்டிப்பாக நான் வி.ஏ.ஓ. பதவியை ராஜினாமா செய்யவேண்டியதிருக்கும். இதனால், அந்தப் பதவி காலியிடமாகும். கூடவே அந்தப் பணியிடத்திற்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபரை உடனடியாகவும் பணியமர்த்த முடியாது. அதற்கு நிர்வாக ரீதியாக சில சிக்கல் இருப்பதால், கண்டிப்பாக அந்த இடத்தில் மற்றொரு நபரை பணியமர்த்த குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பிடிக்கும். இம்மாதிரி சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது.
கடந்த முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்போது உதவிப் பிரிவு அலுவலர் (ஏ.எஸ்.ஓ.) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும், ஆனால், எழுத்துத் தேர்வு தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும்போது ஏ.எஸ்.ஓ. பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஏ.எஸ்.ஓ. பதவிக்கு குறித்த அறிவிப்பு முதலிலேயே வெளியிட்டிருந்தால், நாங்களும் விண்ணப்பித்திருப்போம் என்று அரசுத் துறையில் பணியாற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால், தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இத்தேர்வு முடிவு தாமதத்தால், தேர்ச்சியடைந்த மாணவர்கள் கூட மறுபடியும் தேர்வு எழுதக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், புதிதாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சியடைந்த மாணவர்களால் புது போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாநில பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் கூறும்போது, தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும் தாமதத்தால் தற்போது நடைபெறும் தேர்வில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. கடந்தமுறை தேர்வு எழுதியவர்கள் இந்த முறை தேர்வு எழுதுவதால், புதிய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பது தவறான கருத்து. தற்போது தேர்வு எழுதவிருக்கும் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பதவி கிடைக்கும்பட்சத்தில் அந்தக் காலியிடம் இயற்கையாகவே மதிப்பெண் அடிப்படையில் அடுத்த இடத்தில் இருக்கும் புதிய மாணவருக்கு கிடைத்துவிடும். இதில் எந்த மாணவரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
குறைவான பணிக் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள். கடந்த முறை நேர்முகத் தேர்வு வரை சென்று, தற்போது இறுதிப் பட்டியலை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள், தற்போது நடைபெறவிருக்கும் தேர்வு எழுதும்பட்சத்தில், எந்த சமாதானம் சொன்னாலும், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் மிகப்பெரும் சவால்தான்.
குரூப் 2 தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேர்விற்கு முன்பே கடந்த ஆண்டு தேர்விற்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டால், புதிதாக தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்களும், இறுதிப் பட்டியலை எதிர்கொள்ளும் மாணவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதுதான் தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

No comments:

Post a Comment