Friday, September 16, 2011

காலை உணவுக்கு வித்திட்ட தொடக்கப்பள்ளி!


பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு ஆரம்பித்து பல்வேறு புதிய நடைமுறைகளை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, மற்றப் பள்ளிகளுக்கு முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றி சாதனைப் படைத்துள்ளார் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுபெற்றுள்ள திருச்சி தஞ்சம்மாள் மெமோரியல் தொடக்கப்பள்ளி ஆசிரியை விசாலாட்சி.
மற்றப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாய் உங்கள் பள்ளியை மாற்றியது எப்படி என்று விசாலாட்சியிடம் கேட்டோம்.
இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து 35 வருஷம் ஆகுது. 22 வருஷம் உதவி ஆசிரியரியராக பணியாற்றினேன். 1999ஆம் வருஷத்திலிருந்து இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். எந்தக் குழந்தைக்கும் மூன்று நேர உணவு என்பது கனவுதான்.
மதியம் எப்படியும் சத்துணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், காலையில் பட்டினியுடன் ஒட்டிய வயிற்றுடன் வரும் அவர்கள், மதியத்திற்குள்ளாகவே சோர்வாகிவிடுவார்கள். தொடர்ந்து இதை கவனித்து வந்தேன். இதற்கு ஏதாவது மாற்று வழி செய்யவேண்டும் என்று யோசித்து, காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த யோசித்தேன். ஊரில் ஓரளவு உதவி செய்பவர்களின் பட்டியல் எடுத்து அவர்களிடம் தயங்காமல் கையேந்தினோம். உதவி கிடைத்தது. சிலர் அரிசியாக கொடுத்தார்கள். சிலர் பருப்பு கொடுத்தார்கள். சிலர் தயிர், பழம், காய்கனி கொடுத்து உதவினார்கள். அவர்களின் உதவிப்படி 2007ஆம் ஆண்டு எங்கள் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கினோம். பசிப்பிணியை நீக்கினால், படிப்பறிவு தானாக ஊற்றெடுக்கும் என்ற பொன்மொழியின் அடிப்படையில் நாங்கள் தொடங்கிய இந்த திட்டத்தால், எங்கள் பள்ளியில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் போனது. மாணவர்கள் ஆர்வமாய் பள்ளிக்கு வருகிறார்கள். இன்று எங்கள் பள்ளியைப் பின்பற்றி திருச்சியில் 40 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றவர்களை தொடர்புகொள்ள தற்போது பல்வேறு வசதிகள் பெருகிப்போய், லெட்டர் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், கடிதம் எழுதும் நல்ல விஷயத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களைப் பற்றியும், இன்று வகுப்பில் என்ன நடந்தது? பாடம் எப்படி புரிந்தது என்பதைப் பற்றி ஆசிரியர்களுக்கு கடிதம் எழுத கற்றுக்கொடுத்தோம். அந்த முயற்சி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்தி தந்தது. எந்த மாணவர்களுக்கு பாடங்கள் சரியாகப் புரியவில்லை என்பதை எங்களால் அடையாளம் காண முடிந்தது. அதேபோல, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொல்லை சுவற்றில் படம் வரைந்து வைத்திருப்போம். சுவர் அகராதி என்னும் இந்த செயல்முறை மூலம் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தை எளிமையாக என்னால் எடுத்துச் செல்ல முடிந்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எந்த தொடக்கப்பள்ளியை திருச்சியில் முன்னுதாரணப் பள்ளியாக உயர்த்திவிட்டோம். ஆனால், தமிழகத்தின் முன்மாதிரி தொடக்கப்பள்ளியாக மாற்றுவதே தற்போது எனக்கு இருக்கும் லட்சியம் என்றார் இந்த தேசிய நல்லாசிரியை.

அன்று குழந்தைத் தொழிலாளி: இன்று நல்லாசிரியர்!


புதுக்கோட்டை நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறார். சிறிய கிராமத்தில் வறுமைச் சூழ்நிலையில் பளளிப் படிப்பை முடித்த அவர், கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி பள்ளியை பிரமாதமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையைத் தொட எவ்வளவு தூரம் உழைத்தீர்கள் என்று ஆசிரியர் கருப்பையனிடம் கேட்டபோது, விருதுக்காக உழைக்கவில்லை. நான் பட்ட கஷ்டம், என் மாணவர்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்கு நான் கொடுத்த உழைப்புக்கான கூலிதான் இந்த விருது. என்னுடைய அம்மா, அப்பா இருவரும் கூலித்தொழிலாளர்கள்தான். அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால், அப்பா சம்பாதிப்பது வீட்டுக்கு வராது. அம்மாவின் கூலிதான் எங்களுக்கு எல்லாமுமே. இருந்தாலும் தேவை இருந்ததால், ஸ்கூல் விட்டுவந்து மாலையில் ஏதாவது கூலி வேலைக்கு போய்விட்டு இரவில்தான் வீட்டுக்கு வருவேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஓர் ஆங்கில டிக்ஷனரி வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக மூன்று நாட்கள் வேலைப் பார்த்து கிடைத்த கூலியை மணியார்டர் மூலம் ஓர் பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் புத்தகத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால், புத்தகம் அனுப்புவதற்கு ஸ்டாம்ப் ஒட்டுவதற்கான பணத்தை அனுப்ப வேண்டும் என்பது எனக்கு அப்போது தெரியாது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு தபால்காரர் வீட்டிற்கு வந்தார். ஸ்டாம்பிற்கான ஃபைன் பணத்தைக் கட்டினால், புத்தகத்தை தருவேன் என்றார். என்னிடம் காசு இல்லை என்றதும், மூன்று நாட்கள் போஸ்ட் ஆபீசில் புத்தகம் இருக்கும். பணத்தைக் கட்டிவிட்டு புத்தகத்தை வாங்கிக்கோ என்று சென்றுவிட்டார். பணம் கட்டி புத்தகம் வாங்குவதற்காக அன்று சவுக்குக் கன்று விற்பனை செய்து, அதில் கிடைத்த கூலியில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் டூ முடிச்சு என்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்பதுதான் கனவு. ஆனா, பள்ளிக் கட்டணம் கட்டவே வழி தெரியாததால், என் உறவினர் அளித்த அறிவுரையின் பேரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஆசிரியர் பள்ளியில் படிக்கும்போது, கல்வி உபகரணங்கள் வாங்குவற்குவதற்கும் பகுதிநேரம் வெவ்வேறு இடங்களில் வேலைப் பார்த்தேன்.
1988ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமே அடையாத ஒரு பள்ளியை, அமைதி, பசுமை, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து அதிநவீன கல்வி தொழில்நுட்ப கருவிகளுடன் கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியுடன் கூடிய பள்ளியை உருவாக்குவதுதான் என் கனவு.
அதற்கான வாய்ப்பு 2005ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆனால், நான் எண்ணியதற்கு மாறாக மிக வசதிபடைத்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவி கிடைத்தது. நான் கண்ட கனவு கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, கல்வி அதிகாரியைச் சந்தித்து, இந்த மாறுதலை நிறுத்தி, கல்வியில் எந்த முன்னேற்றமும் அடையாத, ஆசிரியர்களே வெறுத்து ஒதுக்கும் பள்ளிக்கு என்னை மாற்றுதல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கல்வி அதிகாரி, இந்தப் பள்ளிக்கு மாறுதல் செய்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இந்த கிராமத்தில் பள்ளிப்படிக்கும் வயதில், பள்ளிக்கு வராத குழந்தைகள் அதிகம். பெற்றோருக்கு எழுத்தறிவு கிடையாது. எல்லாரும் கூலித் தொழிலாளர்கள். பள்ளிக்கு ஒரு மாணவனை கொண்டு வருவது என்பதே எனக்கு மிகப்பெரிய சவால்.
அனைவருக்கும் கல்வி என்பதைவிட, அனைவருக்கும் தரமான கல்வி என்பதுதான் என் குறிக்கோள். அந்த அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தேன். கிராமக் குழுக் கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்களை வலியுறுத்தினேன். என் ஒருவனால் மட்டும் இது சாத்தியப்படாது என்பதை புரிந்துகொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக்கல்விக்குழு, இளைஞர் மன்றத்தினர், சுயஉதவிக்குழுக்கள், முன்னாள் மாணவர்கள், கல்விக் கொடையாளர்கள் இப்படி ஒவ்வொருவரையும் அணுகி மாணவர்களை பள்ளிக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்து பள்ளிக்கான வளர்ச்சிக்கும் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மாணவர்களுக்கு படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு தகுந்தவாறு கற்பித்தல் முறையை மாற்றினேன். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள்.
எங்கள் கிராமத்தை பொறுத்தவரை கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற்றுக்கும் பொது இடங்கள்தான் கழிப்பறை. எங்கள் மாணவர்கள் பிரசாரத்தின் மூலம் அதனை நிறுத்தினோம். என் சேவையைப் பாராட்டி ஒரு தொண்டு நிறுவனம் நமது கிராமம் விருது அளித்தது. அந்த விருதுக்கான தொகையை வைத்து கிராமத்திற்கு பொதுக் கழிப்பிடம் கட்டினோம்.
பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்குவது எனது கனவு. நண்பர் ஒருவர் தான் பயன்படுத்திவரும் கம்ப்யூட்டர் ஒன்றை முதலில் எங்களுக்குத் தந்தார். அந்த கம்ப்யூட்டரை மாணவர்கள் பயன்படுத்துவதை ஒருநாள் நேரில் பார்த்துவிட்டுச் சென்ற நண்பர், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க 50 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை அளித்தார். அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரின் பெயரில் டி.டி.யாக எடுத்துத் தரச் சொன்னேன். அவரும் ஆட்சியர் பெயரில் எடுத்துக்கொடுத்தார். நமக்கு நாமே திட்டம் மூலம் அந்தப் பணத்தை மூன்று மடங்காக ஆட்சியர் மூலம் பெற்று, அந்தப் பணத்திற்கு முழுவதும் கம்ப்யூட்டர் வாங்கி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு வளர்ந்திருக்கிறது.
இதுதவிர சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன் சில கல்வி உபகரணங்களைப் பெற்று ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை முழுவதும் ரெக்கார்டு செய்து, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு திருப்பி போட்டுக் காட்டுவதன் மூலம் மாணவர்கள் விரும்பி படிக்க ஆரம்பித்தார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஜெராக்ஸ் மிஷின், பிரிண்ட்டர், ஸ்கேனர், எல்லாம் வாங்கி வைத்து, மாணவர்களுக்கு தினமும் நடத்தும் பாடத்தை வாரத்திற்கு ஒரு தடவை முழுஆண்டு தேர்வு போல நடத்தி, அந்த மதிப்பெண்களை உடனடியாக கொடுத்து, அவர்களை ஊக்குவித்து வருகிறோம். இப்போது எங்கள் பள்ளியில் படிக்கத் தெரியாத மாணவர் என்று ஒருவர் கிடையாது என்று பெருமிதப்படுகிறார் 39 வயதில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கருப்பையன்.

புதிய மன்னர்கள்!


மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக கைநிறைய ஊதியம், கனவுப் படிப்பான மருத்துவம் இப்படி எல்லாமும் உதறித்தள்ளிவிட்டு சமுதாயப் பணி செய்வதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வெழுதி டெபுடி-கலெக்டராகவும், உதவி காவல் ஆய்வாளராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள் ஏழு இளைஞர்கள்
கஷ்டப்பட்டு எப்படியாவது என்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி. கம்பெனியில கை நிறைய சம்பாதிக்கணும். அதில் இருந்துக்கிட்டே அப்படியே ஃபாரீன் போயிட்டு ஹைடெக் வாழ்க்கை வாழணும்னு நினைக்கிற இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு, தங்கள் படிப்பை மக்களின் சேவைக்கு பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?.
பழனி பக்கத்துல உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்தது. அப்பா நாலாவது வரை படிச்சிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நான்தான். எங்க குடும்பத்துல யாருமே படிக்காததால, அப்பாவுக்கு என்னை இங்கிலீஸ் மீடியத்துலதான் படிக்க வைக்கணும்னு ஆசை. ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சார். பிளஸ் டூ வுல 1052 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போ பொறியியல், மருத்துவம் படிக்கறதுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. அந்தத் தேர்வில் பழனி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து தேர்ச்சிப் பெற்றேன். நுழைவுத்÷ தர்வு மற்றும் நான் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கோயமுத்தூரில் பி.எஸ்.ஜே. அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு கிடைத்தது. சொல்லப்போனா எங்க ஊர்ல என்ஜினீயரிங் சேர்ந்து படிச்ச முதல் மாணவன் நான்தான்.
படிக்கும்போது அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகைகளைப் பெற்றிருக்கிறேன். 2003ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். 2007ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு முடிக்கும் முன்பாகவே தனியார் ஐ.டி. துறையில் புராஜக்ட் என்ஜினீயர் பதவியில் வேலைக்கு அமர்ந்தேன். எடுத்த எடுப்பிலேயே 35 ஆயிரம் சம்பளம். பட்ட கஷ்டத்துக்கு கைநிறைய சம்பளம் என்ற மனநிலைக்குப் பதிலாக, அரசு கொடுத்த இலவசப் படிப்பில் படித்துவிட்டு, அதில் பெற்ற கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மனம் இடம்கொடுக்கவில்லை. என்னுடைய படிப்பு தமிழக வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணமும், சீறுடைப் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. இதே ஆசையில் ஆறு நண்பர்கள் என்னுடன் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்கள் என்றார், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சிப் பெற்று டெபுடி கலக்டர் பதவியை மறுத்து, டி.எஸ்.பி. பதவியை தேர்வு செய்த பொன்.கார்த்திக்.
முதல் முதல்ல நாங்க எல்லாரும் ஒரு தனியார் பயிற்சி மையத்துலதான் சந்திச்சோம். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1ல் பாஸ் பண்ணியாச்சுன்னா கை நிறைய சம்பளம் கிடைக்கும்னு, நாங்க இந்தத் தேர்வை தேர்வு செய்யல. நான் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பு வந்த சமயம்தான், அந்தப் பணியை உதறிவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத முன்வந்தேன். என்னுடைய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் என்றாலே லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. பணப் பரிவர்த்தனை அனைத்தையும் எலக்ட்ரானிக் முறையில் கொண்டு வந்தால், லஞ்சம் என்ற ஒன்றை அறவே ஒழிக்கலாம். அதற்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை வகுத்துக்கொடுப்பேன். நகரங்களில் மட்டுமே பெரும் கடைகளில் பண பரிவர்த்தனை எலக்ட்ரானிக் கார்டுகள் மூலம் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை அரசு அலுவலகங்கள் ஆரம்பித்து கிராமங்கள் தோறும் கொண்டு சென்றுவிட்டால், லஞ்சத்தை ஒழிக்கலாம்தானே! என்கிறார் இந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைப் பதிவாளர் பதவியில் அமரப்போகும் ஜானகி.
நான் மதுரை தியாகராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருந்தப்போ, அப்பா கேன்சர்ல இறந்துட்டார். வங்கிக் கடன்லதான் பொறியியல் படிப்பை படிச்சேன். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறேன். படிச்சு முடிச்சவுடனேயே தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைச்சது. கடன் வாங்கி படிச்சதுலேயும், வீட்ல பணத் தேவை இருந்ததாலேயும் கண்டிப்பா வேலைக்கு சேர வேண்டிய சூழ்நிலை. ஒன்றரை வருஷம் வேலை பார்த்து இருந்த கடன்களை அடைச்சேன். நண்பர்கள் கொஞ்சம் உதவினாங்க. முதலாளி யாருன்னு தெரியாது. நாள் முழுக்க எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் கூடத்தான் கழிச்சு ஆகணும். என்னுடைய அடையாள அட்டையை கழட்டி வச்சிட்டா, நான் யாருன்னே அந்த நிறுவனத்துக்கு தெரியாது. இந்த மாதிரி சூழலுக்காகத்தான் தங்கப் பதக்கம் பெற்றேனா.. என்ற எண்ணமும், சமுதாயத்துக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த என் படிப்பு உதவணும்ங்கறதால, வேலையை தூக்கிப் போட்டுட்டு தனியார் பயிற்சி மையத்துல டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி முதல் முறையிலேயே தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்கிறார் தமிழக அளவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, சப் கலெக்டராக அமரப்போகும் அருண் சத்யா.
சுத்தமான காய்கனி, பழங்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றிலும் பூச்சிக்கொள்ளி மருந்து விஷம்போல் இருக்கிறது. விவசாயத்தில் இயற்கை உரங்களின் அவசியத்தை மக்களிடைய எடுத்துச் சொல்லணும். இயற்கை உரங்கள் பயன்படுத்தி அதிக சாகுபடி பெறுவதற்கான புதிய திட்டங்கள் வகுத்துக்கொடுத்து, விவசாயத்தில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமா இருக்கணும் அதற்கு புதுத் திட்டங்களை வகுத்துக்கொடுப்பேன் என்கிறார் பல் மருத்துவப் படிப்பை படித்து மருத்துவப் பணிக்குச் செல்லாமல், தற்போது சப் கலக்டர் பதவியில் அமரப்போகும் பிரியதர்ஷினி.
நெய்வேலி பக்கத்துல ஊத்தங்கல்தான் எங்க சொந்த ஊர். வீட்டுல அப்பா அம்மாவை தவிர்த்து என்னோட சேர்த்து வீட்ல மொத்தம் அஞ்சு பேர். நான்தான் மூத்த பொண்ணு. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா ஊத்தங்கல்ல சின்னதா ஹோட்டல் வச்சிருக்கார். பிரமாதமான வருமானம் கிடையாது. கிடைக்கிற சொர்ப்ப வருமானத்துலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் பிளஸ் டூவுல 1126 மதிப்பெண்கள் பெற்றதால, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிச்சவுடனேயே பன்னாட்டு கம்பெனியில சாஃப்ட்வேர் என்ஜினீயர் போஸ்ட் கிடைச்சது. வீட்ல வருமை. நான் வேலைக்குப் போனாதான் தங்கச்சிங்களயும், தம்பியையும் படிக்க வைக்க முடியும். முதல்ல ஹைதராபாத்துலதான் வேலை கிடைச்சது. 40 ஆயிரம் சம்பளம். குடும்பத்துக்காக வேலைக்குப் போனேனே தவிர விருப்பப்பட்டு அந்த வேலையில சேரல. மக்களுக்கு சேவை செய்யணும் இதுதான் ஆசை என்கிறார் குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் ஆறாம் இடம் பிடித்த அனுஷ்யா தேவி.
சென்னை ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பழனிகுமார் கூறும்போது, அப்பா பேப்பர் கடை வச்சிருந்தார். பிளஸ் டூவுல அதிகம் மதிப்பெண்கள் கிடைச்சதால, அண்ணா பல்கலைக்கழகத்துல ஈஸியா இடம் கிடைச்சிடுச்சு. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பதற்கு இடமும் கிடைத்தது. இருந்தாலும் அமெரிக்காவில் போய் படிக்க மனம் ஒத்துக்கவில்லை. அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று படிச்சேன். நான் பட்ட கஷ்டத்துக்கு பலனா, இன்னிக்கு டெபுடி கலெக்டர் பதவியில் அமரப்போகிறேன்.
எனக்கு சொந்த ஊர் மதுராந்தகத்திற்கு அருகேயுள்ள அருங்குளம் கிராமம். அப்பா எட்டாம் வகுப்பு வரைக்குத்தான் படித்துள்ளார். படிச்சது எல்லாம் ஊராட்சிப் பள்ளியில்தான். என்ஜினீயரிங் படிக்கறதுக்கு வசதியில்லாததால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். படிச்சு முடிச்சதும் ஒரு ஐ.டி. நிறுவனத்துல வேலை கிடைச்சது. வேலையில் மனசு ஒட்டல. வேலையை விட்டுட்டு, போட்டித் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். கிராமத்துல இருந்து படிச்சதால எப்படி படிக்கணும், எந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்கணும் என்பதெல்லாம், இரண்டு மூன்று போட்டித் தேர்வு எழுதிய பிறகுதான் தெரிய ஆரம்பித்தது. அதனாலதான், இவங்கள மாதிரி ஒரே வருஷத்துல படிச்சு பாஸ் பண்ணி இந்தப் பதவிக்கு என்னால வர முடியல. இதற்கான உழைப்பு கிட்டத்தட்ட ஐந்து வருஷம் என்று சொல்லும் சதீஷ் தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் துணைப் பதிவாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஏழு பேரில் பழனிக்குமார், சதீஷ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். காரணம் இவர்கள் ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று அரசுத் துறையில் முக்கியப் பதவியில் இருந்துகொண்டேதான் குரூப் 1 போட்டித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இந்தப் பதவியை எட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், இந்த ஏழு பேரின் ஒட்டுமொத்தக் கனவும், தாங்கள் படித்தப் படிப்பு ஏதேனும் ஒரு வகையில் சமுதாயத்திற்கு பயன்படும் என்பதற்காகத்தான் .
கிடைத்த மிகப்பெரிய சம்பளத்தை உதறிவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த ஏழு மாணவர்களும் ஐ.டி. வேலைதான் பிரதானம் என்று ஏங்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வரலாறு சொல்லும் ஊராட்சிப் பள்ளி!





புரவலர்கள் திட்டம், கற்றலில் புதுமை, அரசுத் திட்டங்கள் எதுவாயினும் செயல்படுத்தும் மாநில அளவிலான முதல் பள்ளி என்று பல்வேறு பெருமைகளைக் கொண்டு, 80 வருஷத்தை நோக்கி பீடு நடை போடுகிறது, வங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரவால், தொடக்கப் பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் நலிவடைந்து, சில ஊர்களில் பள்ளிகள் காணாமல் கூட செய்திகள் கூட படித்திருப்போம். ஆனால், 1933 ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் திறக்கப்பட்ட பள்ளி, கம்பீரம் குறையாமல் பல்வேறு வளர்ச்சிகளைத் தொட்டு பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. பள்ளியின் அலுவலக அறையில் நுழைந்ததும் எங்களுக்கு பெருத்த ஆச்சர்யம். 80ல் தொடங்கி 50 வயது வரை பல்வேறு தரப்பட்ட வயதுகளில் ஊர்ப் பெரியவர்கள். எல்லோரும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்று அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்துகொண்டோம்.
நான் இந்தப் பள்ளியில் சேரும்போது, இந்தப் பள்ளிக்கு வயசு பத்து. அப்போ இந்தப் பள்ளி ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. மா.பொ. சிவஞானம் அப்போது கன்னியாகுமரி முதல் திருவேங்கடம் வரை அனைத்துப் பகுதிகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகணும்னா, ஆந்திராவிற்குத்தான் போய் ஆக வேண்டும். நான் இந்தப் பள்ளியில் படிக்கும்போது 200 பேர் படிச்சாங்க. எனக்கு நாலாம் கிளாஸ் நடத்திய நாதமுனி சாரை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியல. வங்கனூர்ல இருந்து ஒரு எட்டு பேர்தான் நடுநிலைப் பள்ளிக்கு போகணும்னு விரும்பினோம். எங்க எட்டு பேருக்காக ஆர்.கே. பேட்டையில் ஒரு இடைநிலைப் பள்ளியை அரசு தொடங்கிச்சு. அதுவும் போராட்டத்துலதான் தொடங்கினாங்க. எங்க எட்டுபேர்ல இரண்டு மாணவர்கள் ஒரு விபத்துல இறந்துபோக, இரண்டு பேர் தொடர்ந்து படிக்க வரல. மீதி இருந்தது 4 பேர்தான். 4 பேருக்காக ஸ்கூல் நடத்த முடியாதுனு சொல்லி ஆர்.கே. பேட்டையில் ஸ்கூல மூடிட்டாங்க. எங்களுக்கு படிக்கணும்னு ஆர்வம் இருந்ததால, நாலாம் கிளாஸ் ஆசிரியர் நாதமுனிதான் எங்களுக்கு தொடர்ந்து படிக்க உதவிப் பண்ணினார். நாலுபேருக்கும் வீட்ல வச்சி கிளாஸ் நடத்துவாறு. தனித் தேர்வர்களாக நாங்க நாலுபேரும் ஈ.எஸ்.எல்.சி. படிச்சு பாஸ் பண்ணினோம். எங்கள்ல ரெண்டு பேரு டீச்சர் டிரெயினிங் போனாங்க. நான் எட்டாங்கிளாசுக்கு மேல படிக்கல. இந்தப் பள்ளியை கடந்து செல்லும்போதெல்லாம் நாதமுனி சார் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததும், எங்கள அவர் கஷ்டப்பட்டு படிக்க வச்சதும்தான் நினைவுக்கு வரும் என்கிறார், 76 வயதுநிரம்பிய எம்.ஜி. பாண்டுரங்கன் என்ற இந்தப் பள்ளியின் பழைய மாணவர்.
பாண்டுரங்கன் நினைவுகூர்ந்த ஆசிரியர் நாதமுனி தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் (அம்மாவின் அப்பா) தாத்தா ஆவார். இன்னொரு கூடுதலான விஷயம். கே.எஸ். ரவிக்குமார் தன் தொடக்கக் கல்வி முழுவதும் இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது கூடுதல் தகவல்.
1954 - 55 ஆம் ஆண்டுகளில் போராட்டம் தீவிரமடைந்த காலக்கட்டம் அது. அப்போ இந்தப் பள்ளியில்தான் படிச்சிட்டு இருந்தேன். வேலைப் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால், வகுப்பு நடத்துவதும் தெலுங்கில்தான் நடத்துவார்கள். ஆனால், இந்தப்பள்ளி தமிழ்ப் பள்ளி. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப் புத்தகங்களும் தமிழில்தான் இருக்கும். தெலுங்கில் புரிந்துகொண்டு தமிழில் எழுத வேண்டும். இப்படித்தான் நாங்கள் தொடக்கப்பள்ளியைப் படித்தோம். அப்போதுதான் வடக்கு எல்லைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. 1958 ஆம் ஆண்டிற்கு பிற்பாடுதான் நடுநிலைப்பள்ளி வங்கனூருக்கு வந்தது. அப்போ நாங்க எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். மா.பொ.சிவஞானம் தலைமையில் போராட்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும். நாங்க எல்லோரும் கலந்துப்போம். ஒரு கட்டத்துல தீவிர போராட்டத்துல கலந்துக்கிட்ட 47 பேரை போராட்டக்காரங்க லிஸ்ட்டுல அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதுல நானும் ஒருத்தன் என்கிறார் தியாகி ஜானகிராமன்.
பள்ளியைப் பார்க்கும்போதெல்லாம் என்றோ படித்தோம் என்று நினைவுகளை மட்டும் தங்களுக்குள் சுமக்காமல், இன்றுவரை தங்களால் முடிந்த நல்ல விஷயங்களை இந்தப் பள்ளிக்கு செய்துகொண்டு வருகிறார்கள், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இந்தப் பள்ளியில் நான் கற்ற அரிச்சுவடிதான் என்னை 30 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக இந்த ஊர் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்கிறார் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் கவிஞருமான மோகனன். 1970 ஆம் ஆண்டுகளில் சென்னை அகில இந்திய வானொலியில் கீர்த்தனை மட்டுமே ஒலிபரப்பாகும். அப்போது வானொலியின் பணிபுரிந்த அகிலன் மூலமாக முதன் முதலாக சென்னை அகில இந்திய வானொலியில் என்னுடைய பாடல்கள், மெல்லிசைப் பாடலாக வலம் வந்தது என்று சொல்லும் மோகனனின் பாடல்களில் ஒன்று தமிழக அரசுப் பாட நூலில் தமிழ் புத்தகத்தில் எட்டாம் வகுப்பில் செய்யுள்களில் ஒரு பாடலாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகள் இயற்றும் நாடகங்கள், அறிவியல் ஆயிரம் தகவல்கள், ஆண்டுக்கு ஒருமுறை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் இப்போதும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.
பள்ளியின் வளர்ச்சிக்கு அரசுத் திட்டங்களைத் தாண்டி ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் என்று பலரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அதன் அடையாளம்தான் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள். தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு தொடக்கப்பள்ளியிலும் மாணவர்கள் உணவருந்துவதற்காக இவ்வளவு பெரிய டைனிங் டேபிள் பார்த்திருக்க முடியாது என்று பெருமைப்படுகிறார் இந்தப் பள்ளியின் தமைமை ஆசிரியை அமுதா, இந்த ஊரில் பெரும்பாலானவர்களுக்கு நெசவுத் தொழில்தான். பெரிய வருமானம் என்பதெல்லாம் கிடையாது. அதனால், இப்பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், எங்கள் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் செய்த பிரசாரத்தின் பயனாக தற்போது, இந்தக் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களே கிடையாது. அதுமட்டுமல்லாமல், பள்ளி நேரத்தைத் தவிர படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் இலவசமாக வகுப்பு நடத்துகிறோம்.
தமிழக அளவில் நடைபெறும் வாசிப்புத் திறன் போட்டியில் தொடர்ந்து எங்கள் பள்ளி மாணவர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். அதுபோல் புரவலர் திட்டத்திலும் எங்கள் பள்ளிதான் மாநிலத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தார் தலைமை ஆசிரியை அமுதா. இந்தப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (தலைமை ஆசிரியைத் தவிர) இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயம்!
ஆந்திரத்திலிருந்து பெரும் போராட்டத்திற்கு இடையே தமிழகத்திற்கு வந்த இந்த வரலாற்றுப் பள்ளியில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியை அமுதா, ஆந்திர மாநிலம், நாராயண வனம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.