Thursday, February 10, 2011

சென்னை பல்கலைகழகத்தில் இணைய வகுப்பு திட்டம்


சென்னை பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏழு கல்லூரிகளும் வீடியோ கான்பரன்சிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடத்தை மற்ற இடங்களில் உள்ள மாணவர்கள் பார்க்க முடிவதுடன், பாடம் நடத்தும் பேராசிரியருடன் உரையாடவும் முடியும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன், 6 கோடியே 50லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் வாரத்திற்கு இருமுறை வகுப்புகள் நடத்தப்படும். இதில் 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் மேலும் 11 கல்லூரிகளுக்கு நீட்டிக்கப்பட்டு, தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார் பல்கலை. துணைவேந்தர் திருவாசகம்.

உணவுப் பாதுகாப்பு தனி படிப்பு!




வைரஸ், பூஞ்சை காளான், நுன் கிருமிகளாலேயே உணவு கெட்டுப் போகிறது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இயற்கை முறை அல்லது செயற்கையாக வேதிக் காரணிகளால் உணவை எப்படி பதப்படுத்தலாம், சேமித்து வைக்கலாம்; உணவில் உள்ள எந்த சத்துக்களும் கெட்டுப்போகாமல், எவ்வாறு நீண்ட நாள் பயன்படுத்தலாம் காலத்திற்குத் தகுந்தாற்போல் புதிய உணவுப் பொருள்களை கண்டுபிடித்தல் இப்படிபல விஷயங்களை கற்றுத் தருவதுதான் புட் டெக்னாலஜி என்று சொல்லப்படும் உணவு தொழில்நுட்பம்.

உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்தலோடு நின்றுவிடுவதில்லை உணவுத் தொழில்நுட்பம். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் தகுந்தமாதிரி புதுமாதிரியான உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பதிலும் புட் டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது. இன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் இன்ஸ்டன்ட் பால் பவுடர் புட் டெக்னாலஜியின் மூலம் வந்ததுதான்.

உணவு தயாரிப்பு நிறுவனம், உணவு ஆராய்ச்சிக் கழகம், ஓட்டல்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், அரசு நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகள், அரசுத் துறையில் உணவு ஆய்வாளர் பணி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளும், ப்ரீலான்ஸ் ஆலோசகராகவும் பணிபுரிந்து கைநிறைய சம்பளம் பெற புட் டெக்னாலஜி படிப்பு பெரிதும் கைக்கொடுக்கும்.

புட் டெக்னாலஜி படிப்பை சிறந்த முறையில், மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கலாம்.
பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்திருந்தால் போதுமானது. முதுநிலை பட்டப்படிப்பு படிக்க இயற்பியல், கணிதம், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம்சயின்ஸ், நியூட்ரிசன், ஹோட்டல் மேனேஜ்மென்டில் பட்டப்படிப்பும், பி.டெக்கில் புட் டெக்னாலஜி படித்திருந்தால் முதுநிலைப் படிப்பில் நேரடியாக சேரலாம்.
இதுதவிர மில்லிங் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் ஆலை தொழில்நுட்பம் சார்ந்த படிப்பில் சேர ஏதாவது ஒரு இளநிலை பட்டமோ அல்லது பொறியியலில் பட்டப் படிப்பு படித்திருந்தாலோ போதுமானது.


ஜூன்9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆலை தொழில்நுட்பம் குறித்த படிப்பில் சேர்வதற்கு ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்பில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. ஹானர்ஸ் படிப்பில் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்திருப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.விவசாயம் மற்றும் பொறியியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது.


இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராப் பிராஸசிங் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் பி.டெக். (ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஃபுட் பிராஸசிங் என்ஜினீயரிங், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிக்ல்ச்சுரல் என்ஜினீயரிங், அக்ரிக்ல்ச்சுரல் பிராஸஸ் என்ஜினீயரிங் படிப்பில் ஏதேனும் ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மாணவர்கள் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.எச்டி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவின்கீழ் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இலவசமாக மல்டிமீடியா படிப்பு



பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவசமாக சினிமா சம்பந்தமான தொழில் கல்வியை இலவசமாக வழங்குகிறது மாநில ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சகம்.
பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வேலையில்லா மாணவர்களுக்கு இலவசமாக திரைத்துறை சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு மாத இலவசப் பயிற்சியை தர தயாராய் இருக்கிறது, தமிழக அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சகம்.
இந்திய அரசின் திரைத்துறை நிறுவனமான நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி என்னவென்றால், இந்திய சினிமாவை தரமாகவும் அதே நேரம் தொழில் நுட்பத்தில் சிறந்ததாகவும் உயர்த்திக் காட்டுவதே இந்நிறுவனத்தின் நோக்கம். இந்தியாவில் எந்த மொழியிலும் வெளியான நல்ல தரமான சினிமாவை உலக சினிமா சந்தையில் கொண்டு செல்வதும் இதன் தலையாய பணியாகும். உலக அளவில் நடைபெறும் சினிமா சார்ந்த நிறுவனங்களின் மத்தியில் நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் நிறுவனத்திற்கும் தனி மரியாதை உண்டு.
இந்தியாவில் மும்பை, டில்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படும் இந்நிறுவனம் பிராந்திய மொழி திரைப்படங்களை சிறந்த தொழில்நுட்பத்துடன் வெளிவர பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அப்பஐ தனித்துவம் வாய்ந்த இந்த நிறுவனம் தற்போது ஒரு மாத கால வீடியோ எடிட்டிங் மற்றும் எடிட்டிங் சார்ந்த சாஃப்ட்வேர் , மல்டிமீடியா குறித்த கல்வியை வழங்க இருக்கிறது. இந்தக் கல்வியை எஸ்.சி. மற்றும் எஸ்.டி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கற்றுக்கொள்ள, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சகம் வாய்ப்பளிக்கிறது.
அந்த வகையில் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளும் மாணவர்கள் கண்டிப்பாக எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களாக இருத்தல் அவசியம். றுபற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. கண்டிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பில்தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்கலாம்.
அதேபோல நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் ஆடியோ டப்பிங் மற்றும் மல்டிமீடியா படிப்புகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் இலவசமாக படிக்க மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பிரிவில் ஒரு மாத இலவச பயிற்சியை பெற விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் இலவசப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முற்றிலும் தொழில் ரீதியாக நடைபெறும் இந்தப் பயிற்சியை, திறம்பட முடிக்கும் மாணவர்களுக்கு வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையில் வீடியோ எடிட்டிங், டப்பிங், ஒளிப்பதிவு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படும்போது, அசல் கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இரண்டு மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
விவரங்களுக்கு,
போன்: 28192506, 28192407, 28191203.

சிறுநீரக பாதுகாப்பு



சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 1.5 லட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக சிறுநீரக பரிசோதனை செய்யும் மருத்துவ முகாமை சமீபத்தில் சென்னை எம். சுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். மனிதர்கள் உயிர் வாழ சிறுநீரகம் மிக முக்கியம். ஆனால், நாட்டில் 6 வயதிலிருந்து 15 வரையுள்ள சிறுவர்களில் 25 சதவீதத்தினர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை கருத்தில்கொண்டுதான், பள்ளி மாணவர்களுக்கு இந்த சோதனை முகாமை அரசு ஆரம்பித்துள்ளது என்றார் மேயர்.

சுகாதாரம் இல்லை



சென்னையில் உள்ள முக்கியப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் குடிதண்ணீர் சுகாதாரமற்றதாக இருக்கிறது என்று கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் சென்னையில் உள்ள 27 அரசு மற்றும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் உள்ள தண்ணீரை சோதனைக் கூடத்தில் சோதனை செய்தபோது இந்த அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியாகியுள்ளது.

சாலைப் பாதுகாப்பு



பெருகிவரும் சாலை விபத்துக்களை குறைக்கவும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளிடமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக சாலை விதிகள் பாதுகாப்பது தொடர்பான புதிய பாடத் திட்டத்தை தொடக்கக் கல்வியில் அறிமுகம் செய்துள்ளது, பஞ்சாப் அரசு.

புதிய கல்லூரிகள்




மருத்துவத் துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்தய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரூ. 1,350 கோடி நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 9, 2011

படிப்பு புதுசு


போலீசாருக்கு மனித உரிமை குறித்த விழிப்புணர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகமும், தேசிய மனித உரிமைக்கழகமும் இணைந்து மனித உரிமை குறித்த குறுகிய கால படிப்பை ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ள புதிய ஏ ற்பாடை செய்துள்ளது. மனித உரிமைகள் குறித்த மாண்புகளை சாதாரண போலீஸ் அதிகாரியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது பல்கலைக்கழக தரப்பு.

லெதர் செறுப்பு பயன்படுத்தக்கூடாது



இமாச்சல் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் லெதர் ஷூ அணிந்து வர தடைசெய்யப்பட்டுள்ளது. லெதர் பொருள் சுற்றுப்புறத்திற்கு கேடானது. எனவே பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடைகளுடன் கேன்வாஸ் சூவை மட்டும்தான் அணிந்துவரவேண்டும் என்று அம்மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது.