Thursday, July 28, 2011

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., புள்ளியியல்




பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், புள்ளியியல்துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறனாளிகளின் தரம் அறிதல், கூறு எடுத்தல், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பரிசோதனை, உயிரியல், பரிசோதனைகள், சுற்றுச்சூழல் கல்வி, பொருளாதார ஆய்வுகள், கல்வி, சமூக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராயத்தக்க திறன் வாய்ந்த பட்ட மேற்படிப்பு மாணவர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இத்துறையில் புதிய 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு எம்.எஸ்சி., புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) துவங்கப்பட்டுள்ளது. இதில், சேருவதற்கான தகுதி பி.எஸ்சி.,யில் புள்ளியியல், கணிதவியல், கணினி அறிவியல் (புள்ளியியல், கணிதம்), பி.சி.ஏ.,வில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (புள்ளியியல், கணிதம்) ஆகியவையாகும். புள்ளியியல் படிப்பில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் ஜெய்சங்கர், உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், புள்ளியியல் துறை, பாரதிதாசன் பல்கலை திருச்சி என்ற முகவரியிலும், 94444-69629 என்ற மொபைல்ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இக்னோவில் புதிய படிப்புகள்



இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் ஹெல்த் சயின்சஸ், சைனிஸ் மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இக்னோவின் ஸ்கூல் ஆப் ஹெல்த் சயின்ஸ் (எஸ்.ஓ.எச்.எஸ்.,) பிரிவில், எச்.ஐ.வி., மெடிசன் பி.ஜி., டிப்ளமோ படிப்பும், டயாலிசிஸ் மெடிசன் சான்றிதழ் படிப்பும் துவங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை இக்னோ, நேஷனல் எய்ட்ஸ் கன்ட்ரோல் அமைப்பு (என்.ஏ.சி.ஓ.,), பொதுநல மருத்துவ இயக்குனரகத்துடன் (டி.ஜி.எச்.எஸ்.,) இணைந்து துவக்கியுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் முழு நிதியுதவி வழங்குகிறது. மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்.

புதிய படிப்பு!



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் (சி.பி.எஸ்.சி.) பட்டப் படிப்பு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் இப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் முதல் தொடங்கும். மேலும் தகவல்களுக்கு 0452-2458231, செல்போன் 9443047400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலைக்கழகம் புதிய படிப்புகள் அறிமுகம்



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதிய முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் உயிர் புள்ளியியல் (எம்.வி.எஸ்சி.,), உணவு பதனிடும் தொழில்நுட்பம் (எம்.டெக்.,) ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப் படிப்பும், சுற்றுப்புறச் சூழல் மாறுபாடும், மீன் வளமும் என்ற முதுகலை பட்டயப் படிப்பும் (எம்.பில்.,) இவ்வாண்டு (2011 - 2012) துவங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதன் முறையாக தனியார் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொழில் முனைய விரும்பும் அறிவியல் பட்டதாரிகள் பயன் பெறும் வகையில், தொலைக்கல்வி மற்றும் கணினி தொடர்பு மூலம் முதுகலை பட்டயப் படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளன. கால்நடை கண் மருத்துவம், அவசர மற்றும் தீவிர சிகிச்சை, வர்த்தக ரீதியான கோழிப் பண்ணை மேலாண்மை, தீவன உற்பத்தி தொழில்நுட்பம், பாரம்பரிய சிகிச்சை மற்றும் மாறுபட்ட கோழியின வளர்ப்பு (காடை, வான்கோழி, ஈமு கோழி வளர்ப்பு) ஆகிய பாடத் தலைப்புகளில் முதுகலை பட்டயப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

கடனை திரும்பச் செலுத்த கால நீட்டிப்பு!



உயர்கல்விக்காக வாங்கும் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஏழு ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகளாக விரைவில் நீட்டிப்பு செய்யப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக, மத்திய அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும், உயர்கல்வி படிப்பதற்காக வங்கிகளில் கடன் பெறலாம் என்றும், கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் காலக்கெடுவும் ஏற்கனவே மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் இக்காலக்கெடுவை, 15 ஆண்டுகளாக நீடிக்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை வேலை வாங்கினால் கிரிமினல் நடவடிக்கை!




மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொல்வது, கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால், இனி ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம் விளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், விளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தேவைக்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வெளியில் அனுப்பி டீ, பிஸ்கெட் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவரச் செய்வதாகவும், ஆசிரியர்களின் வாகனங்களை சுத்தம் செய்தல், ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் கொண்டு வைத்தல், கழிவறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து தொடக்கக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புது திட்டம்!


மாணவர்களின், பாடப் புத்தக சுமையை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ், அறிவியல், கணிதம் என, எந்தப் பாடப் புத்தகமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் தடிமனான பாடப் புத்தகங்களை, மாணவர்கள் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு குறிப்பிட்ட பாடப் பகுதிகளும், அரையாண்டுத் தேர்வுக்கு காலாண்டுத் தேர்வுடன், அரையாண்டுத் தேர்வுக்கு உட்பட்ட கூடுதல் பாடப் பகுதிகளுடன் மாணவர்கள் படிக்க வேண்டும். முழு ஆண்டுத் தேர்வுக்கு, ஒட்டுமொத்த பாடத்தையும் படிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு, அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதையடுத்துதான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த கல்வியாண்டிலிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், மூன்று பிரிவுகளாக பிரித்து, சிறிய அளவில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்ததும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அரையாண்டுத் தேர்வில், காலாண்டுத்தேர்வுக்கான பாடப் பகுதிகளும், முழு ஆண்டுத் தேர்வில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளும் இடம் பெறாது. அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படும்.

Saturday, July 9, 2011

எல்.எல்.ஆர். வாங்குவது ஈஸி!



இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு எல்.எல்.ஆர். லைசன்ஸ் பெறுவதற்கு இனி கால்கடுக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிற்க வேண்டாம். சரியான விண்ணப்பம், வீட்டு முகவரி, பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், சாலை விதிகளை முறையாக தெரிந்துகொண்டு, எல்.எல்.ஆர். பெறுவதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத் தொகைக்கான கட்டண வரைவோலையை எடுத்துக்கொண்டு, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி என்று எந்த கல்வி நிலையத்தின் முதல்வரிடமும் சென்று, எல்.எல்.ஆர். லைசென்ஸ் பெற்றுவிடலாம். அட.. நல்லாயிருக்கே என்று முகம் மலரும் நம்மவர்களுக்கு சிறிய அதிர்ச்சி. இது அத்தனையும் இங்கல்ல. சண்டீகர் மாநிலத்தில். இந்த சட்டத்தை தற்போது பஞ்சாப் மாநிலமும் பின்பற்ற யோசித்து வருகிறது. நம் மாநிலத்தில் எப்போது?

பள்ளிக்கு வருவதற்கு உதவித்தொகை!

தூரம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோகிறது என்பதை புரிந்துகொண்ட இமாச்சல் பிரதேச அரசு அம்மாநில மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து படித்துச் செல்ல உதவித்தொகை அறிவித்துள்ளது.
பள்ளியிலிருந்து மூன்றிலிருந்து 5 கி.மீ. தூரம் வரை உள்ள மாணவர்களுக்கு மாதம் இருநூறு ரூபாயும், ஐந்திலிருந்து எட்டு கி.மீ. தூரம் உள்ள மாணவர்களுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித்தொகை அறிவித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் பள்ளிக்கு கண்டிப்பாக வருவார்கள். பள்ளி இடைநிற்றல் விகிதம் குறையும். தங்கள் மாநிலத்தில் கல்வி அறிவு விகிதம் அதிகரிக்கும் என்று நம்புகிறது இமாச்சல் அரசு. இந்த உதவித்தொகை மூலம் 22,500 மாணவர்கள் உதவிபெருவார்கள். இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 15 ஆயிரம் தொடக்க மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகள் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்கள்.

விவசாயிகளுக்கான பட்டப் படிப்பு!



தொலைநிலைக் கல்வி மூலம் விவசாயிகளுக்கான பி.எஃப்.டெக். பட்டப் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் விவசாயிகளுக்கான இளநிலை பண்ணை தொழில்நுட்பப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலத்தைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரையிலும், தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம். பயிற் உற்பத்தி, பயிர்ப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம், பண்ணை பார்வையிடல் ஆகியவற்றை இந்தப் பட்டப் படிப்பில் படிக்கலாம்.
இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும். 27 வயது நிரம்பிய அனைவரும் இந்தப் படிப்பில் சேர முடியும். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், கோவை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்; தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம்; வேளாண் அறிவியல் மையம், சந்தியூர் ஆகிய பயிற்சி மையங்களில் இப்படிப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. விண்ணப்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது வரவோலை மூலமாகவே பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 3 என்ற முகவரிக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.7,500க்கான வரைவோலையுடன் அனுப்ப வேண்டும்.

குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு இம்மாதம் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவு வெளியிடப்படாததால், ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக இருக்கும் 4,500 காலிப் பணியிடங்களுக்கு இந்த மாதம் ஜூலை 30 ஆம்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்விற்கு இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூன் 19ஆம் தேதி நடக்கவிருந்த இந்தத் தேர்வு, பல்வேறு காரணங்களால் ஜூலை 3ஆம் தேதிக்கும் ஒத்திப்போடப்பட்டது. பிறகு கூடுதலாக பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டதால், தேர்வு ஜூலை 30ஆம் தேதிக்கும் மாற்றியமைக்கப்பட்டதோடு, புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. வழக்கமாக குரூப் 2 தேர்வு நடத்தும்போது, அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டப் பிறகுதான், புதிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும். இதுதான் வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படாத சூழலில் புதிதாக இம்மாதம் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வு, பழைய மாணவர்களை கவலையடைய செய்துள்ளது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று இறுதிப்பட்டியலை எதிர்கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள், ஓர் அலசல்:
சத்யா (கடலூர்): 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை 2008ஆம் ஆண்டு எழுதியிருக்கிறேன். முதல் முறையாக நான் எதிர்கொண்ட தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். என் முழு நேர வேலையே டி.என்.பி.எஸ்.சி.க்கு தயாராவதுதான். நவம்பர் மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததும், உற்சாகமாக படிக்க ஆரம்பித்தேன். 2010 ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1300 காலிப் பணியிடங்களுக்கு. 6 லட்சம் பேர் தேர்வு எழுதினோம். அதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, 2011 ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். நேர்முகத்தேர்வை மொத்தம் 2600 பேர் எதிர்கொண்டோம். நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வாணையம் வெளியிட்டது. மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, பதவிப்பட்டியல் அதாவது இறுதிப் பட்டியல் வெளியாக வேண்டும். அப்படித்தான் கடந்த முறைகளில் நடந்திருக்கிறது. ஆனால், மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதிப் பட்டியலை வெளியிடாமல் டி.என்.பி.எஸ்.சி. காலம் தாழ்த்துகிறது. நான் எடுத்த மதிப்பெண்ணுக்கு பதவி கிடைக்குமா கிடைக்காதா? கிடைக்கும்பட்சத்தில், என்ன மாதிரியான பதவியாக அது இருக்கும் என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கிறது. ஒரு வேளை கிடைக்காமல் போனால், என்ன செய்வது என்ற நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்வையும் எழுதவிருக்கிறேன். என் நிலைதான் நேர்முகத் தேர்வை எதிர்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் என்றார் தேர்வு முடிவை எதிர்நோக்கும் சத்யா.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மாணவர்: பட்டப் படிப்பு முடித்ததில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிச்சிட்டு வர்றேன். இதுவரை இரண்டு தடவை குரூப் 1 தேர்வு எழுதியிருக்கிறேன். இரண்டு தடவையும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, மெயின் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகத் தேர்வில் மதிப்பெண் குறைந்துபோனதால், இறுதிப் பட்டியலில் தேர்வு பெற முடியாமல் போய்விட்டது. அதனால், இந்தத்தேர்வு முடிவை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இம்மாதம் 15ஆம் தேதி வெளியிடப்போவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இறுதிப்பட்டியல் வெளியிடுவதைப் பொறுத்துதான் நான் வி.ஏ .ஓ. பதவிக்கு செல்லவேண்டுமா? அல்லது குரூப் 2 பதவிக்கு செல்ல முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வையும் எழுதவிருக்கிறேன்.
வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியான உடனேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற தொடங்கிவிடும். அதற்கு நான் ஒப்புகை கடிதம் அளித்துவிட்டாலே, நான் வி.ஏ.ஓ. பதவிக்கு சேர்ந்துவிட்டதாகவே கருத்தில் கொள்ளப்படும். இந்தச் சூழ்நிலையில் நான் பணியில் சேர்ந்தபிறகு குரூப் 2 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட்டு, அதில் எனக்கு நான் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்பட்சத்தில், கண்டிப்பாக நான் வி.ஏ.ஓ. பதவியை ராஜினாமா செய்யவேண்டியதிருக்கும். இதனால், அந்தப் பதவி காலியிடமாகும். கூடவே அந்தப் பணியிடத்திற்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபரை உடனடியாகவும் பணியமர்த்த முடியாது. அதற்கு நிர்வாக ரீதியாக சில சிக்கல் இருப்பதால், கண்டிப்பாக அந்த இடத்தில் மற்றொரு நபரை பணியமர்த்த குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பிடிக்கும். இம்மாதிரி சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது.
கடந்த முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்போது உதவிப் பிரிவு அலுவலர் (ஏ.எஸ்.ஓ.) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும், ஆனால், எழுத்துத் தேர்வு தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும்போது ஏ.எஸ்.ஓ. பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஏ.எஸ்.ஓ. பதவிக்கு குறித்த அறிவிப்பு முதலிலேயே வெளியிட்டிருந்தால், நாங்களும் விண்ணப்பித்திருப்போம் என்று அரசுத் துறையில் பணியாற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால், தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இத்தேர்வு முடிவு தாமதத்தால், தேர்ச்சியடைந்த மாணவர்கள் கூட மறுபடியும் தேர்வு எழுதக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், புதிதாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சியடைந்த மாணவர்களால் புது போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாநில பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் கூறும்போது, தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும் தாமதத்தால் தற்போது நடைபெறும் தேர்வில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. கடந்தமுறை தேர்வு எழுதியவர்கள் இந்த முறை தேர்வு எழுதுவதால், புதிய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பது தவறான கருத்து. தற்போது தேர்வு எழுதவிருக்கும் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பதவி கிடைக்கும்பட்சத்தில் அந்தக் காலியிடம் இயற்கையாகவே மதிப்பெண் அடிப்படையில் அடுத்த இடத்தில் இருக்கும் புதிய மாணவருக்கு கிடைத்துவிடும். இதில் எந்த மாணவரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
குறைவான பணிக் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள். கடந்த முறை நேர்முகத் தேர்வு வரை சென்று, தற்போது இறுதிப் பட்டியலை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள், தற்போது நடைபெறவிருக்கும் தேர்வு எழுதும்பட்சத்தில், எந்த சமாதானம் சொன்னாலும், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் மிகப்பெரும் சவால்தான்.
குரூப் 2 தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேர்விற்கு முன்பே கடந்த ஆண்டு தேர்விற்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டால், புதிதாக தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்களும், இறுதிப் பட்டியலை எதிர்கொள்ளும் மாணவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதுதான் தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?




தமிழ்வழியில் படித்து தேர்வெழுதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த ஜெ. பார்த்திபன்
அளிக்கும் டிப்ஸ்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஒன் தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப்போல் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அடுத்ததாக நேர்முகத் தேர்வு. இந்த மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும். முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.
முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1:20 என்ற விகிதத்தில் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 61. முதல்நிலைத் தேர்வை 90 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 1300 மாணவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை 1: 10 என்ற விகிதத்தில் மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு (ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதம்) தேர்வு செய்வார்கள். மொத்தம் 61 பதவிக்கு 610 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் சிறப்பாக பதில் அளிக்கும் 61 பேருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் அளிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரைவடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, கரண்ட் அஃபயர்ஸ்(நடப்பு நிகழ்வுகள்), சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பிரிவு பாடங்களை மெயின் தேர்வுக்கு மட்டும் என்று படிக்காமல் தொடக்கத்திலிருந்து படித்து வந்தால், நிச்சயமாக முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வில் எளிதில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம். இந்தத் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுக் கணக்காய் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 7 மாதம் கடினமாக படித்தால் கண்டிப்பாக இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
2007ஆம் ஆண்டுக்கு முன்புவரை மெயின் தேர்வு முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விருப்பப் பாடத்தில் ஒரு மாணவர் சிறந்த அறிவு பெற்றிருந்தால் போதும் இந்தத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. ஒரு மாணவர் கண்டிப்பாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், பொது அறிவு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெயின் தேர்வில் மொத்தம் 110 கேள்விகள் கேட்கப்படும். இதில் 15 மதிப்பெண்கள் கேள்விகளை 4 கேள்விகள் எழுத வேண்டியதிருக்கும். 5 மதிப்பெண்கள் கேள்விகள் 22, 3 மதிப்பெண் கேள்விகள் 20, 1 மதிப்பெண் கேள்விகள் 40 என்று மொத்தம் 88 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். மீதியுள்ள கேள்விகள் சாய்ஸ்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் வரலாறு கேள்விகளுக்கு பதிலளிக்க வெங்கடேஷன் எழுதிய சமகால இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் மெயின் தேர்வில் பதிலளிக்க எளிதாக இருக்கும். இதுதவிர பிளஸ் டூ வரலாறு புத்தகம், 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள சமூக அறிவியல் புத்தகத்தை நன்றாக படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கரண்ட் அஃபயர்ஸ், சர்வதேச நிகழ்வுகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள, தினமணி, இந்து நாளிதழ்கள், மாதந்தோறும் வரும், க்ரானிக்கல், விசார்ட், நியூ விசால் போன்ற புத்தகங்களை தேர்வு செய்து படித்தால், சர்வதேச நிகழ்வுகள் மற்றும் கரண்ட் அஃபயர்ஸ் போன்ற கேள்விகளுக்கு ஓரளவிற்கு சரியாக விடையளித்திட முடியும்.
தேசிய அளவிலான புதிய திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள, திட்டம் என்ற நூல் மாவட்ட அளவில் உள்ள மைய நூலகத்திற்கு வரும். அந்தப் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது யோஜனா என்று ஆங்கில வடிவில் வரும் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். நூலகத்திற்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவர்கள் இணையதளத்தில் வரும் இதன் பக்கங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இரண்டாம் தாளில் இந்திய அரசியல் கேள்விகளுக்கு விடையளிக்க லட்சுமிகாந்த் எழுதிய இந்தியன் பாலிட்டி ஆங்கில வழி புத்தகத்தைப் படிக்கலாம். அல்லது தமிழில் பி.ஆர். ஜெயராஜ் எழுதிய இந்திய அரசியலலைப்பு நூலை வாசிக்கலாம். அதுபோல இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பிரத்யோகிதா தர்பான் மாத இதழைப் படிக்கலாம். அல்லது டாக்டர் கலிய மூர்த்தி எழுதிய இந்தியப் பொருளாதாரம் புத்தகத்தைப் படிக்கலாம்.இந்திய புவியியல் பாடத்தைப் படிக்க 6 ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புவியியல் பாடங்களைப் படிக்கலாம். அல்லது டாடா மெக்ராகில் புத்தகத்தில் பொது அறிவுப் பகுதியில் புவியியல் பாடத்தைப் படிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்க 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகம் மற்றும், அறிவியல் குறித்த சமீபத்திய செய்திகளை ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழக நிர்வாகத்துறைக் கேள்விகளுக்கு விடையளிக்க தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (tண.ஞ்ணிதி.டிண.ஞிணிட்) உள்ள தகவல்களைத் திரட்டிப் படித்துக்கொள்ளலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள மு.வரதராசனார் எழுதிய புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
மெயின் தேர்வை பொறுத்தவரை நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். கேட்கப்பட்டிருக்கும் எல்லா கேள்விகளுமே பெரும்பாலும் தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாக் கேள்விகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதற்கு முறையான பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். எல்லாக் கேள்விகளுமே படிக்கும்போது தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், அதை எழுதிப்பார்க்கும்போது சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் நேரத்திற்குள் சொல்வதற்கு தடுமாற்றம் இருக்கும். அதனால், வீட்டில் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பாருங்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை எழுத்துப் பயிற்சி மிக அவசியம். எழுத்துப் பயிற்சி இல்லாததால், பல்வேறு மாணவர்கள் தெரிந்த கேள்விக்குக் கூட விடையளிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அதேபோல மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக தேர்வெழுதும் மாணவர்களிடைய இருக்கிறது. இது முற்றிலும் தவறு. தமிழ் வழியில் சிறப்பாக தேர்வெழுதினாலும் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். மொழியினால், மட்டும் மதிப்பெண்கள் கிடைத்துவிடாது. நாம் சொல்லும் விஷயங்கள் எந்தளவிற்கு ஆதாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்பது மட்டுமே தேர்வில் கவனிக்கப்படுகிறது என்பதை தேர்வு எழுதப்போகும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாதனையாளர் பார்த்திபன்.