Thursday, June 30, 2011

ஏழை மாணவர்களுக்கு கல்கி உதவித்தொகை



பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு இப்படி அனைத்துப் பிரிவு படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும், ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவித்தொகை அளிக்கிறது, அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை.
வீட்டில் படிக்க வைக்க போதிய வசதி இல்லை. உடல் ஊனம்,இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடே நன்றாக படிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் உள்ள தற்போது சிறப்பாக படித்து வரும், ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிப் படிப்பு மற்றும் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது அமரர் கல்கி அறக்கட்டளை. இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாணவர்கள் தங்கள் கைப்பட ஒரு கடிதம் வடிவில் எழுத வேண்டும். தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் கடிதங்கள் நிராகரிக்கப்படும். பார்வையற்ற மாணவர்கள், பிறர் எழுதித் தர, கைநாட்டு பதிக்கலாம். சிறப்புக் கல்விப் பயிற்சி தேவைப்படும் (ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ளவர்கள்) மாணவர்கள் சார்பில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்பும்போது, மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க அனுமதி பெற்றுள்ளது குறித்த தகவல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தாற்காலிக அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பதை உறுதிப்படுத்த பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ், கடைசியாக படித்த வகுப்பில் பெற்ற மதிப்பெண் பட்டியல் நகல், மாணவர் படித்த கல்வி நிலையத்தின் முதல்வர் முத்திரை, கையெழுத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
உடல் ஊனமுற்றவர் எனில் அது பற்றிய முழுவிவரம் மற்றும் அதற்கான மருத்துவச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியரில் அனுப்பக் கூடாது. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேவையற்ற சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். சான்றிதழ்கள் திருப்பி அனுப்ப முடியாததால், மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்ந்ந்தெடுக்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள், பத்து பேருக்கு தலா ரூ.7,500 உதவித்தொகை அளிக்கப்படும். பட்டப் படிப்பு மாணவர்கள் 60 பேருக்கு தலா ரூ.4000, மேல்நிலைப்பள்ளி அல்லது டிப்ளமோ படிப்பு மாணவர்கள், 64 பேருக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்கப்படும். ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா, ஆட்டிஸ்டிக் போன்ற சிறப்புக் கல்வி பயிற்சி தேவைப்படும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை அளிக்கப்படும். இவற்றுள் அமரர் கல்கி படித்த மூன்று பள்ளிகளில் மூன்று மேல்நிலை மாணவர்களுக்கு மூன்று உதவித்தொகைகள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள உதவித் தொகைகளைப் பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜூலை 30.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புது எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை - 600020.

தேசிய அளவிலான விடியோ போட்டி!



சர்வதேச சமூகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றத்தை சரிசெய்வதற்கான சிறந்த வீடியோ காட்சிக்கு இந்திய இளைஞர் காலநிலை நெட்வொர்க் அமைப்பு சிறப்பு விருதை வழங்குகிறது.
நாம் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது தெரியுமா? நாம் சாப்பிடும் மாமிச உணவால் சுற்றுப்புறம் எப்படியெல்லாம் சுகாதாரமற்றதாக மாறுகிறது தெரியுமா?. நாம் சாப்பிடும் மாமிச உணவால் மட்டும் பசுமை வீட்டு வாயுக்கள் 18 சதவீதம் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நிரூபித்துள்ளது. உணவு மற்றும் விளைநிலங்களால், சுற்றுப்புறம் எப்பஐ சீர்கெடுகிறது என்பதை நிரூபிப்பதற்கான போட்டித்தான் இது. மாறிவரும் பருவநிலை மாற்றத்தை ஏதாவது ஒரு வகையில் சீர் செய்வதற்கு ஓர் குரலாகத்தான் இந்தப் போட்டி இருக்கும். ஐல்லியை தலைமையிடமாகவும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் இந்தியன் யூத் கிளைமேட் நெட்வொர்க் மூலம் நடத்தப்படும் இந்த வீடியோ போட்டியில் பங்குபெறு 18 வயது நிரம்பியிருந்தால் போதும்.
நீங்கள் எடுக்கும் விடியோ மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது இல்லை. செல்போனில் எடுக்கப்பட்ட படக்காட்சியாகக் கூட இது இருக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கு புரியும்பஐ இருக்க வேண்டும் அவ்வளவுதான்.விடியோ காட்சிகள் 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஓடுவதாய் இருக்க வேண்டும். வீடியோ காட்சிகள் மாநில மொழிகளில் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு புரியும் வகையில் காட்சிகளுக்கு ஊடே ஆங்கில மொழியில் சப் டைட்டில் கொடுக்க வேண்டியது கட்டாயம். இந்தப் போட்டியில் இந்தியாவைச்சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவர்கள்,தனியாகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். நீங்கள் அனுப்பும் படக்காட்சிகள், தெளிவில்லாததாகவும், சேதமடைந்ததாகவோ இருந்தால், அது தேர்வு செய்யப்படாது.
விடியோப் பதிவில் விலங்குகளை துன்புறுத்துவது போலவோ அல்லது கொல்வது போலவோ காட்சிகள் இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் பற்றிய விவரம், கடிதம் அல்லத இ-மெயில் மூலம் அறிவிக்கப்படும். உங்கள் விடியோ தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அதற்கான வெகுமதியை இந்தியன் யூத் கிளைமேட் நெட்வொர்க் அளிக்கும்.
விடியோ பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: ஜூலை 31.
போட்டி குறித்த மேலும்
விவரங்களுக்கு:http://www.foodinfocus.in/

கிராபிக்ஸ் ஓவியப் போட்டி



பிரிண்ட் துறையில் படிக்கும் மாணவர்கள், அனிமேஷன் துறையில் கைத்தேர்ந்த மாணவர்களுக்கான போட்டி இது. சீன நாட்டில் ஹாங்காங் பகுதியில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பணப் பரிசு மட்டுமல்லாமல், இரண்டு மாதம் ஹாங்காங்கில் தங்குவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது, ஹாங்காங் கிராபிக் ஓவியப் போட்டியை நடத்தும் ஷின் - இ- டாய் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு கம்ப்யூட்டர் சாதனத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால், அச்சுத் துறை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அச்சு ஏற்றுவதிலிருந்து, அதை புத்தக வடிவத்திற்கு கொண்டு வருவதுவரை பல்வேறு புதுமைகள் வந்துவிட்டன. அச்சுத் துறையிலேயே 2டி, 3டி, 4டி என்று பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதுமையான ஒரு படைப்பை மாணவர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பலாம்.
படைப்பை அனுப்பும்போது, அது எம்மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்பு முற்றிலும் சொந்தமாக இருக்க வேண்டும். படைப்பை நகல் எடுத்து அனுப்பக் கூடாது. படைப்பு எந்த வகையிலும் சேதமாகாதவாறு அனுப்ப முயற்சியுங்கள். படைப்பிற்கான இன்னொரு பிரதியை பிடிஎஃப் பார்மெட்டில் சிடியில் அனுப்ப மறந்துவிடாதீர்கள்.
மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் அனுப்பலாம். அல்லது கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் அனுப்பலாம். சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் கிராபிக் ஓவியத்திற்கு இந்திய மதிப்பிற்கு ரூ.45 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறந்த படைப்பாக உங்கள் படைப்பு காட்சிக்கு வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் 2012 ஆம் ஆண்டு இரண்டு மாதங்கள் ஹாங்காங்கில் தங்கியிருக்கும் செலவு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட் 15.
படைப்பை எப்படி அனுப்ப வேண்டும், அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது போன்ற தகவல்களை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு :http://www.open-printshop.org.hk/submission2011/pdf/xyd_form_eng.pdf

சர்வதேச சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி:


சுவரொட்டி வடிவமைப்பில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சுவரொட்டிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறலாம்.
வட மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில் அமைந்துள்ளது லூசர்ன். இந்த மாகாணத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் அந்நாட்டின் மாபெரும் கலாசார இசைநிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க சர்வதேச நாடுகளில் இருந்து பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுவரொட்டி கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நீங்கள் வடிவமைத்த சுவரொட்டியும் இடம்பெற வேண்டும் ஆசைப்படும் மாணவர்கள், உடனடியாக சுவரொட்டிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிடலாம்.
பள்ளி, கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். சர்வதேச மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வடிவமைக்கும் சுவரொட்டி பிரதிபலிக்க வேண்டும். வேறு யாரேனும் வடிவமைத்த சுவரொட்டிகள், இணையதளத்தில் வரும் சுவரொட்டிகளின் பிரதிகளை எடுத்து போட்டிக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இது முற்றிலும் மாணவர்களின் கற்பனைத்திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 20 சுவரொட்டிகள், இசை நிகழ்ச்சியின் சுவரொட்டி கண்காட்சியில் இடம்பெறும். அதில் தேர்வு செய்யப்படும் மிகச் சிறந்த சுவரொட்டி, சுவிட்சர்லாந்தின் மிகப் புகழ்பெற்ற ஏபிஜி விளம்பர வர்த்தக நிறுவனம் மூலம் 500 பிரதிகள் எடுக்கப்பட்டு, அந்த சுவரொட்டிகள் சுவிட்சர்லாந்தின் முக்கிய இடங்களை அந்தச் சுவரொட்டி அலங்கரிக்கும். இந்தப் படைப்புக்கு சிறந்த சன்மானமும் அளிக்கப்படும் என்கிறது, லூசெர்ன் மாகாண அதிகாரிகள்.
மாணவர்களின் படைப்புகள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 30.
விவரங்களுக்கு: http://www.graphiccompetitions.com/students-only/weltformat-student-poster-competition

’சி-சாட்’ கிளம்பும் புது சர்ச்சை!



கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் படித்து முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவு இனி நிறைவேறாதோ என்ற கவலையை சமீபத்தில் நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் இரண்டாம் தாள் ஏற்படுத்தியுள்ளது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாள் முற்றிலும் பொது அறிவுப் பகுதியாக இருக்கும். இரண்டாம் தாள் முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடமாக அமைந்திருக்கும். இந்த முறை தேர்வு கடந்த ஆண்டு வரையில்தான். ஆனால், இந்த ஆண்டுசிவில் சர்வீசஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (சிசாட்) எனும் புதிய பகுதியை இரண்டாம் தாளில் புகுத்தியிருக்கிறது, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி).
இந்த புதிய முறை சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாள் முற்றிலும் வட இந்திய மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போலவே இருக்கிறது. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாது. தமிழக மாணவர் ஒரு கேள்வியை படித்து புரிந்துகொள்ளும் நேரத்தில், வட மாநில மாணவர்கள் மூன்று கேள்விகளுக்கு எளிதாக விடையளித்துவிடுவார்கள். காரணம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நிகராக அதே கேள்வியை இந்தி மொழியில் கொடுத்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எத்தனை தூரம் சரி என்பதை தெரிந்துகொள்ள சென்னையில் இயங்கிவரும் பிரபலமான சில ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநர்களை தொடர்பு கொண்டோம்.
கார்த்திகேயன் (இயக்குநர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்) : இந்தக் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வின் புதிய முறை வரவேற்கத்தக்கது. ஆனால், இரண்டாம் தாள் முற்றிலும் தமிழக மாணவர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. இரண்டாம் தாள் பொது அறிவு மற்றும் ஆங்கிலம் என்று பிரிக்கப்பட்டிருக்கும். யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள நிபந்தனை அறிக்கையில், இரண்டாம் தாளில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை சோதிக்கும் வகையில் இடம்பெறும் கேள்விகளுக்கு இந்தி மொழிபெயர்ப்பு இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது வெறும் 8 கேள்விகள்தான். ஆனால், பொது அறிவு கேள்விகள் முற்றிலும் பத்தி வடிவில் இருந்தது. இதை புரிந்துகொள்ள ஆங்கிலப் புலமை மிக மிக அவசியம். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு முற்றிலும் இந்தி அர்த்தத்துடன் கேள்விகள் அமைக்கப்பட்டிருந்தது, வருத்தம் அளிக்கிறது. இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை யு.பி.எஸ்.சி.யிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். அதற்கான பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இந்தக் கேள்வித்தாள், இந்தி பேசும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மட்டுமே அமைந்துள்ளது. சாமானிய மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வை இனி எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம் கல்வித் திட்டம் மாற வேண்டும். அல்லது யு.பி.எஸ்.சி. தேர்வாணையம், இந்தி மொழியைப்போல் மாநில மொழிகளுக்கும் கேள்வித்தாளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.
கணேஷ் (இயக்குநர், கணேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி): சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டாம்தாளில் இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பகுதி மற்றும் பொது அறிவுப் பகுதி. பொது அறிவுப் பகுதியில் கேட்கப்பட்டிருந்த ஆங்கில கேள்விகளுக்கு மட்டும்தான் இந்தியில் அப்படியே மொழிபெயர்த்து கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பகுதிக்கு இணையாக இந்திப் பகுதி கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாம் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளும் முற்றிலும் ஆங்கில மொழி, இந்தி மொழி இரண்டிலும் கேட்கப்படுவது வழக்கம். இந்த வரைமுறையை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மட்டும் தளர்த்திக்கொள்ள, எப்படி கோர முடியும் என்றார்.
பிரபாகர் (இயக்குநர், பிரபா ஐ.ஏ.எஸ். அகாதெமி): மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகை தேர்வுகளின் கேள்வித்தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது சிவில் சர்வீஸ் கேள்வித்தாளில் முதல் இரண்டு தாள்களின் கேள்விகளுமே ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் கேட்கப்பட்டுள்ளன. இப்போது சர்ச்சை எழுந்துள்ளது, இரண்டாம் தாளில் மட்டும்தானே தவிர முதல் கேள்வித்தாளில் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வைத் தவிர யுபிஎஸ்சிஇ நடத்தும் மற்றத் தேர்வுகளில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்தியிலும் மொழிபெயர்ப்பு இருக்கும். ஆனால், அந்தக் கேள்விகள் அனைத்தும் பொதுவான கேள்விகள். அதுவும் ஓரிரு வரிகளில் முடிந்துவிடும். அறிவியல், சமூகம், தேசியம் அல்லது கணிதம் சார்ந்த கேள்விகளாக மட்டும் இருக்கும். அதனால், எந்த மாநிலத்து மாணவர்களும் கேள்விகளை எளிதில் உள்வாங்கிக் கொண்டு விடையளிக்க முடியும்.
ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் தாளில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில் 74 கேள்விகள் மெண்ட்டல் எபிலிட்டி மற்றும் யோசித்து விடையளிக்கும் கேள்விகளாகவே அமைந்திருந்தது. மெண்ட்டல் எபிலிட்டி கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்கள் ஆங்கில அறிவில் புலமை பெற்றவர்களாக இருப்பதோடு, கணிதத்திலும் கை தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். அதேபோல 34 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் படித்து பொருள் புரிந்து கொள்வதற்கே ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் தடுமாறிப் போகும் அளவிற்கு கடினமான கேள்விகளாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வகை கடின வகை கேள்விகள் அனைத்தும், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அப்படியென்றால், அந்த வகை கேள்விகளை ஒருமுறை படித்த மாத்திரத்திலேயே இந்தி பேசும் மாணவர்கள் புரிந்துகொண்டு எளிதில் விடையளித்திட முடியும்தானே. இதுதவிர மாணவர்களின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் எட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விகள் எந்த மொழியினரும் எளிதாக பொருள் கொள்ளும் வகையில் மிக எளிதாக கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் இந்தக் கேள்வித்தாள் முழுக்க முழுக்க இந்தி பேசும் வட மாநில மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது போல் தெரிகிறது. இந்தக் கேள்வித்தாளை கிராமத்திலிருந்து ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று கனவில் வந்து எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக விடையளிக்க முடியாது.
சிவில் சர்வீஸ் தேர்விற்கு சிறப்பாக படித்து, பயிற்சி எடுத்திருக்கும் மாணவர்கள், இந்தக் கேள்வித்தாளில் 70 சதவீத கேள்விகளுக்கு கூடசரியாக விடையளித்திட முடியாது. ஆனால், வெகு சுமாராக பயிற்சி எடுத்துவிட்டு இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் இந்தி மாணவர்களால், வெகு சாதாரணமாய் 80 சதவீத கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில்தான் சிவில் சர்வீஸ் இரண்டாம் கேள்வித்தாள் அமைந்திருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் முதல்நிலைத் ரேத்வுதான் தடைக்கல். இதில் ஒருவர் தேர்ச்சிப் பெற்றுவிட்டால், எளிதாக மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்றுவிடலாம். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவி முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். ஆனால், யு.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ள இந்த சிசாட் கேள்வித்தாள், இந்த வெற்றிப் படிக்கட்டுக்கு தடைக்கல்லை வைத்தது போல் மாணவர்கள் உணருகிறார்கள். எனவே யுபிஎஸ்சி இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
பல்லாயிர மாணவர்களின் லட்சியத் தேர்வாக விளங்குவது சிவில் சர்வீஸ் தேர்வு. தேசம் முழுவதும் பல்வேறு கனவுகளுடன் இத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எல்லா மாணவர்களும், எதிர்கொள்ளும் வகையில் எவ்வித பாரபட்சமின்றி கேள்வித்தாளை வடிவமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ். கனவு காணும் மாணவர்களின் கனவு.

விசாலினிக்கு என்னாச்சு?


சர்வதேச அளவில் சவாலான பல்வேறு கணினித் தேர்வில் வெற்றி பெற்ற திருநெல்வேலியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி விசாலினி தற்போது பள்ளிப் படிப்பை தொடருவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
பொதுவாக மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் 90 -- 110 இருக்கும். இதுவே பில்கேட்ஸுக்கு 160. தென் கொரியாவைச் சேர்ந்த கிம் உங் யாங் என்ற நபருக்கு நுண்ணறிவுத் திறன் - 200. நுண்ணறிவுத் திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர் இவர். ஆனால் விசாலினியின் நுண்ணறிவுத் திறன் 225 என்று புகழ் பெற்ற மருத்துவர்கள் கணித்துள்ளார்கள்.
மைக்ரோசாப்ட் நடத்தும் பொறியியல் மாணவர்களுக்கான எம்.சி.பி. ஆன்லைன் தேர்வில் விசாலினி தேர்ச்சிப் பெற்றுள்ளார். அதேபோல, பி.இ., எம்.இ. மாணவர்களே எழுத சிரமப்படக்கூடிய, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான சிஸ்கோ நடத்தும் மிகக் கடின தேர்வான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் (சிசிஎன்ஏ) ஆன்லைன் தேர்வில் விசாலினி தேர்ச்சிப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு, பாகிஸ்தானைச்சேர்ந்த 12 வயது நிரம்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஷா ஹைதர் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றார் என்ற பெருமையை பெற்றிருந்தார். அந்தச் சாதனையை தற்போது 2011ஆம் ஆண்டு விசாலினிமுறியடித்துள்ளார். படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் விசாலினியின் சாதனைப்பட்டியல் நீள்கிறது. இவ்வளவு சாதனைகளைச் செய்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளிப் படிப்பை தொடருவதில் என்ன சிக்கல் வந்துவிட்டது என்று மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டோம். பிரச்சினைக் குறித்து மாணவியின் தாய், சேதுராகமாலிகா பேச ஆரம்பித்தார்.
விசாலினி பிறந்தது திருநெல்வேலியில்தான். அவளுக்கு இப்போ 11 வயசு ஆகுது. 6ஆம் வகுப்பு படிக்க வேண்டிய அவ, இப்போ எட்டாம்வகுப்பு படிச்சிட்டு இருக்கா. படிப்புல அவ பயங்கர சுட்டி. 2006 - 2007ஆம் கல்வி ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ, அவளுடைய அறிவுத் திறமை, படிக்கும் ஆற்றல் இவற்றையெல்லாம் கவனித்த பள்ளி நிர்வாகம், அவளுக்கு புரோமோஷன் கொடுத்து அந்த ஆண்டு இடைவெளியிலேயே இரண்டாம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார்கள். அதே மாதிரி 2007 - 2008 கல்வி ஆண்டு மூன்றாம் வகுப்புக்கு போன விசாலினிமற்ற மாணவர்களை விட விரைவாகவும், தெளிவாகவும் பாடங்களை படித்ததால், பள்ளி நிர்வாகம் அவளை நான்காம் வகுப்பில் சேர்த்துக்கொண்டது. 2008ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்தாள். பிரச்சினை ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த போதுதான் தொடங்கியது.
2009 ஜூலை மாசம் திடீரென்று விசாலினியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. என்னப் பிரச்சினைன்னு பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, அவளுடைய வயசுக்கு அவ ஆறாம் வகுப்புலதான் படிக்கணும்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. பிள்ளைய அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். விசாலினியின் திறமையை தெரிந்துகொண்ட திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் ஆங்கிலப் பள்ளி நிர்வாகம், எங்களை தொடர்பு கொண்டு, விசாலினியை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன் பேரில் அந்தப்பள்ளி யூனிபார்ம், புத்தகம் எல்லாமுமே புதிதாக வாங்கி, விசாலினியை பள்ளிக்கு அனுப்பினோம். ஸ்கூல்ல சேர்ந்த கொஞ்ச நாளைக்குள் காலாண்டுத் தேர்வு வந்தது. தேர்வு எழுதச் சென்ற மாணவியை, ஆறாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்குப் பதிலாக நான்காம் வகுப்புத் தேர்வை எழுதச் சொல்லி கட்டாயப் படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவளை அடித்து துன்புறுத்தியதால், அந்தப் பள்ளியில் இருந்து விசாலினியை அழைத்து வந்துவிட்டோம்.
அதற்குப் பிறகு மற்றொரு ஆங்கிலப் பள்ளி, விசாலினியை தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், சிறப்பு அனுமதி கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து பெற்று வந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பள்ளியில் அவளை சேர்த்துக்கொண்டார்கள். மகளின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக நாங்களும் ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டோம். தற்போது அந்தப் பள்ளியில் விசாலினி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு சிறப்பு அனுமதி அளிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குநரகம் என்று ஏறாத படிகள் இல்லை. ஆனால், அவளுக்கு அந்த சிறப்பு அனுமதி கடிதம் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. இன்றுவரை தினமும், விஷாலினியிடம் சிறப்பு அனுமதி கடிதத்தைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது பள்ளி நிர்வாகம். பள்ளி திறந்து எல்லா மாணவிகளும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்க, பள்ளியில் கடிதம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்ற அச்சத்தில் இன்னும் என் மகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள் என்று பேசும்போதே கவலையில் அந்தத் தாயின் குரல் உடைந்தது.
விஷாலினியின் நுண்ணறிவுத் திறன் மற்றும் அறிவாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், அவள் தொடர்ந்து படிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விசாலினிபெற்றோரின் கோரிக்றகை.