Wednesday, August 10, 2011

இந்திய சுதந்திரம் - பொது அறிவு!



காந்தி 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரையை தொடங்கினார்.
· 1848ஆம் ஆண்டு லார்டு டல்ஹௌசி இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
· மார்ச் 29, 1857ஆம் ஆண்டு மங்கல் பாண்டே சுதந்திரத்திற்கான முதல் விதையை விதைத்தார்.
· 1857ஆம் ஆண்டு சிப்பாய்க்கழகம் மூலம் சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் வெடித்தது.
· தேசியப் பாடலான வந்தே மாதரம் முதன் முதலில் 1896ஆம் ஆண்டு பாடப்பட்டது.
· பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரச் சட்டம் ஜூலை முதல் தேதி 1947ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
· சுதந்திரத்திற்கான முதல் கிளர்ச்சி மே 10, 1857ஆம் ஆண்டு ஏற்பட்டது.
· இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர சட்டர்ஜி. இந்திய தேசிய காங்கிரஸ் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
· 1908ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
· இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மண முதன்முதலில் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பாடப்பட்டது.
· 1912ஆம் ஆண்டு இந்திய தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.
· 1916ஆம் ஆண்டுதான் முதன்முதலில் சரோஜினி நாயுடு காந்தியை சந்தித்தார்.
· அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில்ரெஜினால்ட் டயர் என்னும் ஆங்கிலேயரால் ஏப்ரல் 13, 1919ஆம் ஆண்டு வரலாற்றில் மறக்கமுடியாத படுகொலை நடந்தது.
· திலகர் 1920ஆம் ஆண்டு இறந்ததையடுத்து காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
· 1921ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக காந்தி பொறுப்பேற்றார். அவர் தலைமை பொறுப்பேற்று நடந்த முதல் போராட்டம் ஒத்துழையாமை இயக்கம்.
· 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய இயக்கத்தை தோற்றுவித்தவர் - சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு
· 1923 ஆம் ஆண்டு உப்பு மீதான வரி விதிக்கப்பட்டது.
· பகத்சிங் 1923ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போதுஅவருக்கு வயது 23.
· வெள்ளையனே வெளியேறு போராட்டம் குறித்த அறிவிப்பு இந்திய தேசிய காங்கிரஸின் பம்பாய் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
· 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தது.
· 1929 ஆம் ஆண்டு லார்டு இர்வின் பிரபு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்க ஒப்புக்கொண்டார்.
· இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்து காந்திஜி 1930ஆம் ஆண்டு விலகினார். தலைமைப் பதவி குறித்து தவறுதலான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்ததால் காந்தி இந்த முடிவை மேற்கொண்டார்.
· 1930 உப்பு சத்தியாக்கிரகம் காந்தி தலைமையில் நடைபெற்றது.
· 1931, 1932ஆம் ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது.
· புனேயில் உள்ள ஆகாகான் கோட்டையில் 1940ஆம் ஆண்டு காந்தி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
· வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்காக சரோஜினி நாயுடு 1942ஆம் ஆண்டு காந்திஜியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட இந்த சிறைவாசம் 21 மாதம் இருந்தது.
· 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாட்டினை ஒலிபரப்பும் வகையில் ரகசியமாக காங்கிரஸ் ரேடியோ ஒலிபரப்பானது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மூன்று மாதமே செயல்பட்டது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மும்பையில் சில இடங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டது. இதை முற்றிலுமாக தொகுத்து ஒலிபரப்பியவர் உஷா மேத்தா.
· காந்திஜியை முதன் முதலில் இந்தியாவின் தந்தை என்று சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1944ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஆஸாத்ஹிந்த் ரேடியோவில் சுபாஷ் சந்திரபோஸ் தேச விடுதலை குறித்து உரையாற்றும்போது காந்தியை அவ்வாறு கூறினார்.
· அருணா ஆசாஃப் அலி என்பவர்தான் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போõராட்டத்தின் கதாநாயகி என்று வர்ணிக்கப்படுகிறார்.
· 1947 ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவை பிரிக்க திட்டம் வகுத்தார்.
· 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
· தேசிய கீதம் வங்களா மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்தப் பாட்டு தேசிய கீதத்திற்கான அங்கீகாரத்தை இந்திய அரசியலலைப்பு அங்கீகராம் அளித்துள்ளது.
· சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் பால கங்காதிர திலகர்
· இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிட்டிஷின் பிரதமராக இருந்தவர் கிளெமண்ட் அட்லி.
· சாரே ஜஹான்சே அச்சா எனும் சுதந்திர வேட்கையைத் தூண்டும் இந்திப் பாடலை எழுதியவர் முகமது இக்பால்.
· காங்கிரஸில் கட்சியின் மூன்று முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
· இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி.


ஆகாய உச்சிதான் எங்கள் லட்சியம்!



நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்!
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்;
நான் பிறந்தேன் கனவுடன் ;
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

என்ற தன்னம்பிக்கை வரிகளை அந்த அரங்கத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் உதடுகள் திரும்பச் சொல்ல தொடங்கியது, குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி. அரங்கத்தின் ஒட்டுமொத்த மாணவர்களையும் தன் தன்னம்பிக்கை வரிகளில் கட்டிப்போட்ட அந்த சிறப்பு விருந்தினர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
முதல் ஆண்டு மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கும் இந்த முகாமில் பழைய மாணவர் என்ற முறையில் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். எனக்கும் இந்த எம்.ஐ.டி. கல்வி நிலையத்திற்கும் நீண்ட நாள் உறவு உண்டு. 1954ஆம் ஆண்டு, உங்களைப்போல் நானும் முதலாமாண்டு மாணவராக இந்தக் கல்வி நிலையத்திற்குள் நுழைந்தேன். என் பெற்றோர் இந்த கல்வி வளாகத்திற்குள் என்னை விட்டு விட்டுச் சென்றார்கள். 1954ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை இந்த கல்வி நிலையத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்தான் என்னை ஆராய்ச்சியாளராக இந்த சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியது.
இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. நான் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றிருந்தேன். வகுப்பில் குரூப் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். என் பேராசிரியர் பெயர் பாண்டோ. நான் மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேல் வரிசையில் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். எங்கள் பேராசிரியர்கள் கீழ் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். போட்டோகிராபர் போட்டோ எடுக்க தயாராகிக்கொண்டிருந்தபோது, சட்டென்று பேராசிரியர் என்னை அழைத்தார். கலாம் என் மாணவன். இந்த ஆண்டு அவன் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறான். அவன் என்னோடு சேர்ந்து அமர்வதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார். அந்த நிகழ்ச்சி என்னை பெரிதும் நெகிழச் செய்தது. அந்த நிகழ்வு, என்னை அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற வேட்கையை தூண்டியது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் மந்திரக்கோல். மாணவர்களை மனந்திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டு அவர்களை மென்மேலும் உயர்ந்தும் மந்திரச் சொல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதேபோல் இன்னொரு மறக்க முடியாத சம்பவமும் இதே வளாகத்தில் நடந்தது. அப்போது நான் மூன்றாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரங் படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றாம் ஆண்டு இறுதியில் ஸ்டூடண்ட் புராஜக்ட் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். ஸ்டூடண்ட் புராஜக்ட் வடிவமைக்க ஆறு மாதம் கொடுப்பார்கள். எங்களின் வழிகாட்டி பேராசிரியர் ஸ்ரீனிவாசன். அவர் மிகவும் கண்டிப்பானவர். சிஸ்டம் டிசைன், ஏர்கிராப்ட் வடிவமைப்பதில் அவர் மிக திறமைசாலி. எங்கள் குழுவில் மொத்தம் எட்டுபேர். அதில் என்னுடைய பங்கு சிஸ்டம் டிசைன் மற்றும் சிஸ்டம் இண்டக்ரேஷன், மற்ற மாணவர்கள் ஏர்கிராப்ட்டின் மற்றப் பணிகளை கவனித்துக்கொள்வார்கள். புராஜக்ட் கிட்டத்தட்ட முடிவடையும் தருணம் அது. அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் வசதி கிடையாது. சிஸ்டம் வடிவங்களை முழுவதும் கைப்பட வரைந்து ஆக வேண்டும். மிகவும் சிரமப்பட்டு புராஜக்ட்டை வடிவமைத்திருந்தோம். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எங்களிடம் வந்தார். என்னிடம் புராஜக்ட் விவரங்களை கேட்டார். நானும் கொடுத்தேன். சிஸ்டம் டிசைன் சம்பந்தமான நான் தொகுத்து வைத்திருந்த விவரங்களைப் பார்த்த அவரின் முகம் சுருங்கியது. உன்னிடம் நிறைய விஷயங்கள் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நீ தொகுத்திருக்கும் விஷயங்கள் சரியாக இல்லை என்று கடினமாக கோபித்துக்கொண்டவர், இன்று வெள்ளிக்கிழமை. இன்னும் இரண்டு நாள் உங்களுக்கு அவகாசம். திங்கள்கிழமை திருத்தப்பட்ட திட்ட வடிவமைப்பு என்னிடம் சமர்ப்பிக்கவேண்டும். புராஜக்ட்டை சமர்ப்பிக்காவிட்டால், உனக்கு அரசு அளிக்கும் ஸ்காலர்ஷிப்பை ரத்து செய்துவிடுவேன் என்று சொல்லி சென்றுவிட்டார். எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ஸ்காலர்ஷிப்பில் படித்துக்கொண்டிருந்த எனக்கு, அவர் சொன்ன வார்த்தை கஷ்டமாய் போனது. ஆனால் சோர்ந்து அமர்ந்துவிடாமல், இரண்டு நாள் தூங்காமல், சாப்பிடாமல், புதிய புராஜக்ட்டை தயாரித்தோம். வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவும் தூங்கவில்லை, புதிய புராஜக்ட்டை ஞாயிற்றுக்கிழமை காலையில் பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தோம். மனதெல்லாம் பயங்கர பயம். புராஜக்ட்டை முழுவதுமாக படித்துப் பார்த்த பேராசிரியர். கொடுக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் புதிய புராஜக்ட்டை வடிவமைத்த எங்களை வெகுவாகப் பாராட்டியதோடு. சிறந்த புராஜக்டாக எங்களின் திட்டத்தை தேர்வு செய்தார்.
எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம்பெல், விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் போல, இந்தியாவில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றவர்கள் கல்வியில் மேதைகள் இல்லை ஆனால், இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவர்கள் செய்த அறிய கண்டுபிடிப்பு இருக்கிறது. அதற்கு அவர்கள் மேற்கொண்ட அயராத கடின உழைப்பும், தங்கள் துறையில் இருந்து பற்றுதலே ஆகும். அதேபோல நீங்களும் கடின உழைப்பை உங்கள் துறையில் காட்டுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எடிசனைப் போன்று, பெல்லைப் போன்று படைப்பாளிகள் என்ற எண்ணத்தை நெஞ்சில் உரமிட்டுக்கொள்ளுங்கள். விடா முயற்சி, தொடர்ந்து அறிவை மேம்படுத்துதல், கடின உழைப்பு ஆகியவை உங்களை சிறந்த ஆராய்ச்சியாளனாக மாற்றும்.
2020ஆம் ஆண்டிற்குள் இந்தியா வல்லரசாக வேண்டும். அதற்கு இன்னும் ஒன்பது ஆண்டுகளே இருக்கிறது. நம் இந்தியா வல்லரசு ஆவதற்கு. இந்தியாவில் விவசாயம் வளர்ச்சியடைய வேண்டும். கல்வி அதிலும் பெண்கல்வி மேன்மை அடைய வேண்டும். இந்தியாவில் இருக்கும் 6 லட்ச கிராம மக்களுக்கும் தகவல் பரிமாற்ற வசதிகள் பெற்றிருக்க வேண்டும். எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் இடையூரு இல்லா போதிய போக்குவரத்து. இவற்றையெல்லாம் பூர்த்தி செய்துவிட்டால், நம் வல்லரசுக் கனவை எளிதில் எட்டிவிடலாம் என்று நம்பிக்கை வரிகளை மாணவர்களிடம் விதைத்தார் கலாம்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு கலாம் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்:
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் ராக்கெட் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் சமயத்தில் நாம் இன்னும் அந்தளவிற்கு வளர்ச்சியை எட்டவில்லையே...
கண்டிப்பாக எட்டுவோம். அதற்கு நம்பிக்கை வேண்டும். என்னால் செய்ய முடியும் என்று நம்புவோம். அடுத்து நம்மால் செய்ய முடியும் என்று நம்பினால், இந்தியாவாலும் முடியும் என்பது நிரூபணம் ஆகும்.
இந்தியா லஞ்சமே இல்லாத நாடாக எப்போது மாறும் ?
நூறு கோடி மக்கள்தொகையை கடந்துவிட்டோம். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வீட்டிலும் அம்மா அப்பா, இரண்டு மகள் ஒரு மகன். அல்லது இரண்டு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வீட்டில் அம்மா அல்லது அப்பா தங்களின் வீட்டின் அத்தியாவசிய தேவைக்கு அதிகமாக, சம்பாதிக்கத் தூண்டுவதுதானே லஞ்சம். இதை எத்தனை மகள்கள் எத்தனை மகன்கள் தட்டிக் கேட்டுள்ளீர்கள். லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி வரும் பொருளை தொட மாட்டேன் என்று எத்தனை மகள்கள் அல்லது மகன்கள் வீட்டில் தகப்பனாரிடம் தட்டிக் கேட்டுள்ளீர்கள்? ஒரு வீட்டில் பெறப்படும் லஞ்சம்தான் இந்த நாட்டில் நிலவும் லஞ்சம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளை நான் மிகப்பெரும் ஆயுதமாக நான் கருதுகிறேன். எந்தக் குழந்தையின் பேச்சையும் பெற்றோர் கேட்க தவறியதில்லை. நீங்கள் உங்கள் தந்தையுடன் லஞ்சம் வாங்காதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள்.. அப்போது பாருங்கள் இந்தியா லஞ்சம் இல்லாத நாடாக மாறிப்போகும்.
நாங்கள் எல்லோரும் உங்களைப்போல் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், நீங்கள் யாரைப்போல் ஆகவேண்டும் என்று விரும்பினீர்கள்? கனவு கண்டீர்கள்?
எனக்கு அப்போ 10 வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அறிவியல் ஆசிரியர் சிவ சுப்பிரமணிய ஐயர். அவர் கரும்பலகையில் ஒரு பறவையின் இறக்கை, வால், தலை இவற்றையெல்லாம் தனித்தனியாக வரைந்து, இந்தப் பறவை எப்படி பறக்கிறது என்று எங்களிடம் கேட்பார். நான் வெளியில் வந்து பார்ப்பேன். வானத்தில் பறவைகள் பறந்துகொண்டிருக்கும். இந்த பறவைப் பறப்பதன் தொழில்நுட்பம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும், நான் கண்ட கனவும்தான் எம்.ஐ.டிக்கு என்னை அழைத்து வந்தது. ராக்கெட் என்ஜினீயராக என்னை வளர்த்தது.
தலைமைதாங்கும் நாடாக எப்போது இந்தியா மாறும்?
தலைமை என்ற வார்த்தை தவறு. எப்போது நூறு கோடி மக்களும், அமைதியான, சந்தோஷமான வாழ்வை அனுபவிக்கிறார்களோ அதுவே சிறந்த நாடு. அதைப்போல நம் நாடு விரைவில் மாற வேண்டும். அதற்கு ஆக்கப்பூர்வமான நம்பிக்கை நாம் ஒவ்வொருவரும் விதைக்க வேண்டும்.
வெளிநாட்டு ஊதியத்திற்காக பல மாணவர்கள் நம் நாட்டில் கிடைத்த மிகப்பெறும் கல்வியறிவை, அனுபவத்தை வேறொரு நாட்டிற்கு செலவழிக்கிறார்களே..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லி வச்சிருக்காங்க. இது நம்நாட்டின் மரபு. கலாசாரம். இதை ஏன் மாற்ற வேண்டும். வெளிநாட்டிற்கு செல்லும் நம் மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு சதவீதம் மட்டுமே. மீதியுள்ள 99 சதவீத அறிவார்ந்த மாணவர்கள் நம் நாட்டில்தானே இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் நம்பிக்கையை விதைத்தால், வெளிநாடுகளைப்போல் நம் நாடும் வல்லரசாகத்தானே செய்யும்.
இட ஒதுக்கீடு பிரச்சினையால் மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாமல் போய்விடுகிறதே?
அதிகப்படியான கல்வி நிலையங்களின் வரவால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கூடுதலாக இடங்கள் இன்னும் காலியாகவே இருக்கிறது. சேருவதற்கு மாணவர்கள் இல்லை என்ற நிலையே இருக்கிறது. இந்த நிலை இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவம், மேலாண்மை, பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் போன்ற துறை வரை விரியும். அதற்கு கூடுதலாக எல்லாத் துறைகளிலும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் கூடுதல் இருந்தால், இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். விருப்பப்பட்ட பிரிவை மாணவர்கள் படிகும் நிலை மலரும்.