Wednesday, May 25, 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் - நீடிக்கும் சிக்கல்!



சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லாததால், இந்த ஆண்டு பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வர ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என்ற செய்தி கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி வாரியம் என்று நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஒவ்வொன்றிற்கும் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறைகள் வேறு வேறானதாக இருக்கும். மாநில கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படித்த ஒரு மாணவனின் கல்வி தரத்தை விட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படித்த ஒரு மாணவனின் கல்வித் தரம் அதிகமாக இருக்கும். இதனால், மாணவர்களிடையே கல்வி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். இந்த குறைகளை எல்லாம் கலைந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம்.

கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு முதற்கட்டமாக சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தகங்கள் அச்சடித்து, மாணவர்களுக்கு விநியோகிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கும் ஒரு சில வாரங்களே இருக்கும் தருவாயில்தான், சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லாததால், இந்த ஆண்டு பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்றலாம் என்று தமிழக அரசு இந்த தடாலடி உத்தரவை பிரப்பித்தது. பழைய புத்தகங்களை அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் பள்ளி திறக்கும் தேதியை ஜூன் 15க்கு மாற்றி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை சரிதானா? உண்மையில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் இல்லையா என்பது குறித்து கல்வியாளர்கள் சிலர் தெரிவித்த கருத்து:

தாமரைக்கண்ணன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கழகம்): சமச்சீர் கல்வித் திட்டம் நல்ல திட்டம்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மாநில கல்வி வாரியம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் கல்வி வாரியம் இப்படி எல்லா வகையினருக்கும் ஒரே மாதிரி பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் அது சமச்சீர் கல்வித் திட்டம் ஆகிவிட முடியாது. கல்விக் கட்டணம், உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் தேவைகள் இதுபோன்ற காரணிகளும், சமமாக இருந்தால் மட்டுமே அது சமச்சீர் கல்வி திட்டம் என்கிறார்கள் மிகப்பெரும் கல்வியாளர்கள். மாநில கல்வி தரத்தை பார்க்கும்போது, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையான கட்டடங்கள் இல்லாமல், வகுப்புகள் மரத்தடியில்தான் நடந்து வருகிறது. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அமர சரியான இருக்கைகள் கிடையாது. சில முக்கியப் பாடங்கள் கற்றுத்தர போதுமான ஆசிரியர்கள் கிடையாது, அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியரே, சமூக அறிவியல் பாடத்தையும் நடத்தி வருகிறார். ஆனால், மெட்ரிக் கல்வி நிலையத்தில் போதுமான ஆசிரியர்கள், அமருவதற்கு தரமான இருக்கைகள் என்று எல்லாமே மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் மாநில கல்விக்கும் மெட்ரிக் கல்வி நிலையங்களுக்கும் இருக்கையில், இதையெல்லாம் சமன் செய்யாமல், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று சொல்வது முரணான விஷயம். இன்னும் சொல்லப்போனால், சமச்சீர் கல்வித் திட்டம் என்று சொல்வதை பொதுப் பாடத்திட்டம் என்று சொன்னால் அது சரியாகப் பொருந்தும்.

கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு மட்டும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியானால், இந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்புக்கும், அடுத்த ஆண்டு (2012) மூன்றாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு (2013) நான்காம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு இப்படித்தானே சமச்சீர் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். அப்போதுதானே ஒரு திட்டம் முழுமையாக மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால், அப்படியில்லாமல் கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, திடீரென்று ஒட்டுமொத்தமாக அனைத்துப் வகுப்பிற்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு அவசர அவசரமாக கொண்டு வரவேண்டிய அவசியமும் எங்களுக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஆனால், தற்போது அச்சிடப்பட்டுள்ள புத்தகத்தில் சில தவறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசு கூறியுள்ளபடி நான்கு வகையான பள்ளிகளின் தரம் எல்லாம் சமன் செய்து, உண்மையிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்த புதிய பாடத்திட்டத்தை முனைப்பாக அறிமுகப்படுத்தினால், அதை வரவேற்கிறோம்.

புத்தகத்தில் குறை இல்லை: தற்போது தயாரிகியுள்ள புத்தகங்கள் அனைத்தும் தரத்தில் எந்த குறையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான சிறப்பம்சங்கள் நிறையவே இருந்தன. வழக்கமாக தமிழ்பாடத்தில் செய்யுள், உரைநடை, இலக்கணம் இப்பஐ தனித்தனியாக இருக்கும். ஆனால், சமச்சீர் கல்வி பாடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய புத்தகத்தில் உரைநடை, அதைத் தொடர்ந்து செய்யுள் மற்றும் செய்யுளில் இடம்பெறக்கூடிய இலக்கணமும் இருந்தது. வங்கி விண்ணப்பம், ரயில்நிலையத்தில் முன்பதிவு விண்ணப்பம் என்று முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. மனித நேயத்தை வளர்க்கும் விஷயமாக உலகளவில் நடந்த முக்கியமான விபத்துக்கள் அதில் மீண்டு வந்த மனிதர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, ஒரு சில விஷயங்கள் அரசுக்கு ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில், அந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு புத்தகத்தை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் 7, 8, 9 மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர்.

ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்: கல்வி பற்றிய முடிவுகளில் பயிற்று மொழி போன்ற சில மட்டுமே அரசியல் சார்ந்தவை, மற்றவை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எடுக்க வேண்டியவை. பாடத்திட்டம் கல்வியாளறது பொறுப்பு. சமச்சீர் கல்விக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக நான் இருந்துள்ளதால், இன்று எழுந்துள்ள சில பிரச்சினைகளை விளக்க விரும்புகின்றேன். ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வாரியங்களைச் சார்ந்த மூத்த ஆசிரியர்களைக் கொண்ட உட்குழுக்கள் அமைக்கப்பட்டு, நான்கு வாரியப் பாடத் திட்டங்களையும் ஒபபிடுமாறும், பொதுப் பாடத்திட்டம் வகுக்க வழிமுறைகளைக் கூறவும் கேட்டுக் கொள்ளப்பட்டன. அவ்வுட்குழுக்களின் அறிக்கைப்படி, பாடத் திட்டங்களிடையே பெருத்த வேறுபாடுகள் ஏதுமில்லைஎன்றும், ஒரு சிலவற்றில் மாநில வாரியப் பாடத்திட்டங்கள் கல்வியியல் கோட்பாடுகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டப் பொதுப் பாடத் திட்டக் குழுக்களிலும் நான்கு வாரியத்தைச் சார்ந்த ஆசிரியர்களோடு கல்லூரி ஆசிரியர்களும் இணைந்து செயலாற்றியுள்ளனர். எனவே பாடத் திட்டடங்கள் தரமற்றவை என்றக் குற்றச்சாட்டு தனிப்பட்டவரது விருப்பு, வெறுப்புகளினால் கூறப்படுகின்றது. உட்குழுக்கள் பொதுத் தேர்வு வினாத் தாள்களையும் அலசினர். ஆங்கிலோ-இந்தியன், மெற்றிக் தேர்வுகளில் ஒன்றிக்கு மேற்பட்ட வினாத் தாள்கள் இருந்த போதிலும் ஒரு தாள் கொண்ட மாநில வாரியத் தேர்வை விட அதிக சாய்ஸ் இருப்பது காணப்பட்டது. நன்முறையில் தயாரிக்கப்பட்ட சமச் சீர்கல்வி பாடத் திட்டங்களை முடக்குவது சரியான முடிவல்ல. பாடநூல்களில் முந்தைய ஆட்சியாளரது படைப்புகள் இருப்பது ஏற்புடையதில்லை என்றால் அவற்றை நீக்கி விட்டு பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமே!.

எஸ்.ராஜேந்திரன் (உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவர்): மாநில கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், சி.பி.எஸ்.சி. என்று பல்வேறு மாதிரியான கல்வி முறைகள் நம் மாநிலத்தில் மட்டுமே இருக்கின்றன. வேறு மாநிலங்களில் இம்மாதிரியான சிக்கலான நடைமுறை கிடையாது. இப்பஐ வேறுபட்ட கல்வி முறையால் மாணவர்களின் கல்வித் தரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தது உண்மைதான். அதை சரிசெய்வதற்காக அறிமுகப்படுத்தபட்டதே சமச்சீர் கல்வி. தற்போது இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் குறை இருப்பதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. பாடத்திட்டத்தை பொறுத்தவரை கடந்த முறை வெளிவந்த ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு புத்தகங்கள் தரமானவையாகத்தான் இருந்தது. அதில் எந்தவித குறையும் இல்லை. தற்போதுள்ள புத்தகத்தில் குறை இருந்தால், குறையுள்ள பக்கங்களை நீக்கிவிட்டு புத்தகத்தை வெளியிடலாமே. தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கடந்த ஆட்சியின் சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது. அப்படியானால், தமிழ், சமூக அறிவியல் புத்தகங்களை மட்டும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துவிட்டு, ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ள கணிதம், அறிவியல், ஆங்கிலம் புத்தகத்தை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?
ப. சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்: சமச்சீர் கல்வி திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்று அரசு தெரிவிக்கவில்லை. பாடத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. அதை கலைந்து, முழுவதுமாக சீர்திருத்தி புத்தகங்களை அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என்றுதான் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தில் தற்போது தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் தொடர்ச்சி சரியாக இல்லை என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவரவேண்டிய புத்தகங்கள் அனைத்தும் ஒரே ஆண்டில் அவசரகதியில் தயாரித்ததால், பாடங்களில் பல்வேறு பிழைகளும், குழப்பங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தவறுகளை எல்லாம் கலைந்து, புதிய தரமான எல்லோருக்கும் பொருந்தக்கூடிய சமச்சீர் கல்வி புத்தகத்தை அரசு அடுத்த ஆண்டு வெளியிடுமானால், அதை வரவேற்கலாம்.

இதற்கிடையே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு தடைசெய்துள்ள தமிழக அரசை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஒருபுறம் என்றால், இந்த தடைக்கு மெட்ரிக் பள்ளிகள் தங்கள் நன்றிகளை அரசுக்கு தெரிவித்து வருகிறது.

மெட்ரிகுலேஷன்ல படிக்கக்கூடிய அதே பாடத்தை என் பிள்ளைகள் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கப்போறான் என்று சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தோம். ஆனால், அரசின் இந்த அறிவிப்பு எங்களை கவலையடைய செய்துள்ளது என்ற பெற்றோர்களின் புலம்பல்களும் இல்லாமல் இல்லை. ஆதரவும் எதிர்ப்பும் வலுவடைந்துள்ள இந்நிலையில் அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Monday, May 23, 2011

மாணவர்களுக்கு மகுடம் சூட்டும் பால்ஸ்ரீ

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நாட்டிலேயே தலைசிறந்த விருது பால்ஸ்ரீ விருது. பெரியவர்கள் தங்கள் துறைகளில் சாதிப்பதற்கு எப்படி பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுகிறதோ, அதேபோல் மாணவர்களின் புதிய படைப்பாக்கத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் மாணவர்களுக்காக அளிக்கப்படும் நாட்டின் மிக உயரிய விருது இந்த பால்ஸ்ரீ விருது.

முதன் முதலில் 2000 - 2001 ஆம் ஆண்டில்தான் பால்ஸ்ரீ விருதுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 2001ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு அளவில் பால் ஸ்ரீ விருது, 22 மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 9 வயது முதல் 16 வயது வரை இருக்க வேண்டும். பால்ஸ்ரீ விருது போட்டிக்கான அறிவிப்பு ஆண்டுதோறும் ஜூன் மாதம் வெளிவரும்.
பால்ஸ்ரீ விருது போட்டிக்கு, படைப்புத் திறன் அதாவது ஓவியத்திறன், கட்டுரை எழுதும் திறமை, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு இப்படி ஏதாவது ஒன்றில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ஏதேனும் பிரிவில் திறமைபெற்றவர்களாக இருப்பின், முன்பு ஏதேனும் போட்டியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன், மாணவர்களின் வயது வரம்புச் சான்றிதழ், பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னையில் இயங்கும் மண்டல அலுவலகங்களை தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஒரு வெள்ளைத் தாளில் மாணவர்கள் தங்கள் திறமைகள், படைப்புத் திறன் குறித்த குறிப்பை எழுதி, சரியான முகவரி மற்றும் பிறந்த தேதி, படிக்கும் வகுப்பு இவற்றையெல்லாம் குறிப்பிட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்யும் மண்டல அலுவலகம், முதல் கட்டமாக மாவட்ட அளவில் மாணவர்களின் திறமையை சோதிக்கும் போட்டியை நடத்தும். இந்தப் போட்டியில் போட்டி நேரத்தில் தலைப்பு கொடுக்கப்பட்டு, அந்தத் தலைப்பிற்கு மாணவர்கள் கட்டுரை, ஓவியம் மற்றும் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருவனந்தபுரத்தில் தென் இந்திய அளவில் நடைபெறும் பால்ஸ்ரீ விருது, அரையிறுதி தகுதிச் சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பாண்டிச்சேரி என்று மூன்று மாநில மாணவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் டில்லியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள். இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பால்ஸ்ரீ விருது வழங்கப்படும்.

பால்ஸ்ரீ விருதை பொருத்தமட்டில், விருது வாங்குபவர் மட்டுமல்லாமல், தேசிய அளவில் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும், உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. இந்த ஆண்டில் மாவட்ட வாரியாக முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 64 பேர். அதில் அரை இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்த மாணவர்கள் 15 பேர். இதில் அரை இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று, டில்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ரம்யா லட்சுமி பால்ஸ்ரீ விருது பெற்றார். இப்போது பால்ஸ்ரீ விருதுபெற்ற மாணவி உள்பட நான்கு மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள்தான் என்றார் அவர்.
உயர்கல்வி படிக்க உதவித்தொகை மட்டுமல்லாமல், சிறப்பு வாய்ந்த விருது, நம் படைப்பிற்கான தேசிய அங்கீகாரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பெற உங்களுக்கும் ஆசை இருக்கிறதா... இப்போதே பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பியுங்கள். பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 31ம் தேதிதான் கடைசி என்கிறார் துணை இயக்குநர் ஹேமநாதன்.
இந்தப் போட்டிக் குறித்து விவரங்கள் தெரிந்துகொள்ளவும், விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
1. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 73 ஏ, மேட்டுத் தெரு, காஞ்சிபுரம் - 2. தொலைபேசி - 044 - 27231339.
2. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, சாரதா கல்லூரி சாலை, சேலம் - 16. றுதாலைபேசி - 0427 - 2442197.
3. ஙருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 22/3 சமது பள்ளித் தெரு, காசா மலை நகர், திருச்சி - 20. றுதாலைபேசி - 0421 - 4312423122.
4. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 5 மணிமேகலை தெரு, முத்தமிழ் நகர், தஞ்சாவூர் - 7. றுதாலைபேசி - 04362 - 240252.
5. மதுரை, ராமநாதபுர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, அரசு இசைக்கல்லூரி வளாகம், பசுமலை, மதுரை - 4.
6. ஙருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய கட்டிட வளாகம், 820/8, டிராக்டர் சாலை, என்.ஜி.ஓ. ஏ காலனி, திருநெல்வேலி - 7, தொலைபேசி - 0462-2553890.
7. சென்னை மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் அலுவலர், ஜவஹர் சிறுவர் மன்றம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு வளாகம், ஹால்ஸ் ரோடு, சென்னை - 8, தொலைபேசி - 044 - 28192152.