Friday, September 16, 2011

வரலாறு சொல்லும் ஊராட்சிப் பள்ளி!





புரவலர்கள் திட்டம், கற்றலில் புதுமை, அரசுத் திட்டங்கள் எதுவாயினும் செயல்படுத்தும் மாநில அளவிலான முதல் பள்ளி என்று பல்வேறு பெருமைகளைக் கொண்டு, 80 வருஷத்தை நோக்கி பீடு நடை போடுகிறது, வங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரவால், தொடக்கப் பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் நலிவடைந்து, சில ஊர்களில் பள்ளிகள் காணாமல் கூட செய்திகள் கூட படித்திருப்போம். ஆனால், 1933 ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் திறக்கப்பட்ட பள்ளி, கம்பீரம் குறையாமல் பல்வேறு வளர்ச்சிகளைத் தொட்டு பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. பள்ளியின் அலுவலக அறையில் நுழைந்ததும் எங்களுக்கு பெருத்த ஆச்சர்யம். 80ல் தொடங்கி 50 வயது வரை பல்வேறு தரப்பட்ட வயதுகளில் ஊர்ப் பெரியவர்கள். எல்லோரும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்று அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்துகொண்டோம்.
நான் இந்தப் பள்ளியில் சேரும்போது, இந்தப் பள்ளிக்கு வயசு பத்து. அப்போ இந்தப் பள்ளி ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. மா.பொ. சிவஞானம் அப்போது கன்னியாகுமரி முதல் திருவேங்கடம் வரை அனைத்துப் பகுதிகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகணும்னா, ஆந்திராவிற்குத்தான் போய் ஆக வேண்டும். நான் இந்தப் பள்ளியில் படிக்கும்போது 200 பேர் படிச்சாங்க. எனக்கு நாலாம் கிளாஸ் நடத்திய நாதமுனி சாரை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியல. வங்கனூர்ல இருந்து ஒரு எட்டு பேர்தான் நடுநிலைப் பள்ளிக்கு போகணும்னு விரும்பினோம். எங்க எட்டு பேருக்காக ஆர்.கே. பேட்டையில் ஒரு இடைநிலைப் பள்ளியை அரசு தொடங்கிச்சு. அதுவும் போராட்டத்துலதான் தொடங்கினாங்க. எங்க எட்டுபேர்ல இரண்டு மாணவர்கள் ஒரு விபத்துல இறந்துபோக, இரண்டு பேர் தொடர்ந்து படிக்க வரல. மீதி இருந்தது 4 பேர்தான். 4 பேருக்காக ஸ்கூல் நடத்த முடியாதுனு சொல்லி ஆர்.கே. பேட்டையில் ஸ்கூல மூடிட்டாங்க. எங்களுக்கு படிக்கணும்னு ஆர்வம் இருந்ததால, நாலாம் கிளாஸ் ஆசிரியர் நாதமுனிதான் எங்களுக்கு தொடர்ந்து படிக்க உதவிப் பண்ணினார். நாலுபேருக்கும் வீட்ல வச்சி கிளாஸ் நடத்துவாறு. தனித் தேர்வர்களாக நாங்க நாலுபேரும் ஈ.எஸ்.எல்.சி. படிச்சு பாஸ் பண்ணினோம். எங்கள்ல ரெண்டு பேரு டீச்சர் டிரெயினிங் போனாங்க. நான் எட்டாங்கிளாசுக்கு மேல படிக்கல. இந்தப் பள்ளியை கடந்து செல்லும்போதெல்லாம் நாதமுனி சார் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததும், எங்கள அவர் கஷ்டப்பட்டு படிக்க வச்சதும்தான் நினைவுக்கு வரும் என்கிறார், 76 வயதுநிரம்பிய எம்.ஜி. பாண்டுரங்கன் என்ற இந்தப் பள்ளியின் பழைய மாணவர்.
பாண்டுரங்கன் நினைவுகூர்ந்த ஆசிரியர் நாதமுனி தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் (அம்மாவின் அப்பா) தாத்தா ஆவார். இன்னொரு கூடுதலான விஷயம். கே.எஸ். ரவிக்குமார் தன் தொடக்கக் கல்வி முழுவதும் இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது கூடுதல் தகவல்.
1954 - 55 ஆம் ஆண்டுகளில் போராட்டம் தீவிரமடைந்த காலக்கட்டம் அது. அப்போ இந்தப் பள்ளியில்தான் படிச்சிட்டு இருந்தேன். வேலைப் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால், வகுப்பு நடத்துவதும் தெலுங்கில்தான் நடத்துவார்கள். ஆனால், இந்தப்பள்ளி தமிழ்ப் பள்ளி. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப் புத்தகங்களும் தமிழில்தான் இருக்கும். தெலுங்கில் புரிந்துகொண்டு தமிழில் எழுத வேண்டும். இப்படித்தான் நாங்கள் தொடக்கப்பள்ளியைப் படித்தோம். அப்போதுதான் வடக்கு எல்லைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. 1958 ஆம் ஆண்டிற்கு பிற்பாடுதான் நடுநிலைப்பள்ளி வங்கனூருக்கு வந்தது. அப்போ நாங்க எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். மா.பொ.சிவஞானம் தலைமையில் போராட்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும். நாங்க எல்லோரும் கலந்துப்போம். ஒரு கட்டத்துல தீவிர போராட்டத்துல கலந்துக்கிட்ட 47 பேரை போராட்டக்காரங்க லிஸ்ட்டுல அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதுல நானும் ஒருத்தன் என்கிறார் தியாகி ஜானகிராமன்.
பள்ளியைப் பார்க்கும்போதெல்லாம் என்றோ படித்தோம் என்று நினைவுகளை மட்டும் தங்களுக்குள் சுமக்காமல், இன்றுவரை தங்களால் முடிந்த நல்ல விஷயங்களை இந்தப் பள்ளிக்கு செய்துகொண்டு வருகிறார்கள், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இந்தப் பள்ளியில் நான் கற்ற அரிச்சுவடிதான் என்னை 30 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக இந்த ஊர் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்கிறார் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் கவிஞருமான மோகனன். 1970 ஆம் ஆண்டுகளில் சென்னை அகில இந்திய வானொலியில் கீர்த்தனை மட்டுமே ஒலிபரப்பாகும். அப்போது வானொலியின் பணிபுரிந்த அகிலன் மூலமாக முதன் முதலாக சென்னை அகில இந்திய வானொலியில் என்னுடைய பாடல்கள், மெல்லிசைப் பாடலாக வலம் வந்தது என்று சொல்லும் மோகனனின் பாடல்களில் ஒன்று தமிழக அரசுப் பாட நூலில் தமிழ் புத்தகத்தில் எட்டாம் வகுப்பில் செய்யுள்களில் ஒரு பாடலாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகள் இயற்றும் நாடகங்கள், அறிவியல் ஆயிரம் தகவல்கள், ஆண்டுக்கு ஒருமுறை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் இப்போதும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.
பள்ளியின் வளர்ச்சிக்கு அரசுத் திட்டங்களைத் தாண்டி ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் என்று பலரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அதன் அடையாளம்தான் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள். தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு தொடக்கப்பள்ளியிலும் மாணவர்கள் உணவருந்துவதற்காக இவ்வளவு பெரிய டைனிங் டேபிள் பார்த்திருக்க முடியாது என்று பெருமைப்படுகிறார் இந்தப் பள்ளியின் தமைமை ஆசிரியை அமுதா, இந்த ஊரில் பெரும்பாலானவர்களுக்கு நெசவுத் தொழில்தான். பெரிய வருமானம் என்பதெல்லாம் கிடையாது. அதனால், இப்பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், எங்கள் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் செய்த பிரசாரத்தின் பயனாக தற்போது, இந்தக் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களே கிடையாது. அதுமட்டுமல்லாமல், பள்ளி நேரத்தைத் தவிர படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் இலவசமாக வகுப்பு நடத்துகிறோம்.
தமிழக அளவில் நடைபெறும் வாசிப்புத் திறன் போட்டியில் தொடர்ந்து எங்கள் பள்ளி மாணவர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். அதுபோல் புரவலர் திட்டத்திலும் எங்கள் பள்ளிதான் மாநிலத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தார் தலைமை ஆசிரியை அமுதா. இந்தப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (தலைமை ஆசிரியைத் தவிர) இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயம்!
ஆந்திரத்திலிருந்து பெரும் போராட்டத்திற்கு இடையே தமிழகத்திற்கு வந்த இந்த வரலாற்றுப் பள்ளியில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியை அமுதா, ஆந்திர மாநிலம், நாராயண வனம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment