Friday, September 16, 2011

அன்று குழந்தைத் தொழிலாளி: இன்று நல்லாசிரியர்!


புதுக்கோட்டை நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறார். சிறிய கிராமத்தில் வறுமைச் சூழ்நிலையில் பளளிப் படிப்பை முடித்த அவர், கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி பள்ளியை பிரமாதமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையைத் தொட எவ்வளவு தூரம் உழைத்தீர்கள் என்று ஆசிரியர் கருப்பையனிடம் கேட்டபோது, விருதுக்காக உழைக்கவில்லை. நான் பட்ட கஷ்டம், என் மாணவர்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்கு நான் கொடுத்த உழைப்புக்கான கூலிதான் இந்த விருது. என்னுடைய அம்மா, அப்பா இருவரும் கூலித்தொழிலாளர்கள்தான். அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால், அப்பா சம்பாதிப்பது வீட்டுக்கு வராது. அம்மாவின் கூலிதான் எங்களுக்கு எல்லாமுமே. இருந்தாலும் தேவை இருந்ததால், ஸ்கூல் விட்டுவந்து மாலையில் ஏதாவது கூலி வேலைக்கு போய்விட்டு இரவில்தான் வீட்டுக்கு வருவேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஓர் ஆங்கில டிக்ஷனரி வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக மூன்று நாட்கள் வேலைப் பார்த்து கிடைத்த கூலியை மணியார்டர் மூலம் ஓர் பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் புத்தகத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால், புத்தகம் அனுப்புவதற்கு ஸ்டாம்ப் ஒட்டுவதற்கான பணத்தை அனுப்ப வேண்டும் என்பது எனக்கு அப்போது தெரியாது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு தபால்காரர் வீட்டிற்கு வந்தார். ஸ்டாம்பிற்கான ஃபைன் பணத்தைக் கட்டினால், புத்தகத்தை தருவேன் என்றார். என்னிடம் காசு இல்லை என்றதும், மூன்று நாட்கள் போஸ்ட் ஆபீசில் புத்தகம் இருக்கும். பணத்தைக் கட்டிவிட்டு புத்தகத்தை வாங்கிக்கோ என்று சென்றுவிட்டார். பணம் கட்டி புத்தகம் வாங்குவதற்காக அன்று சவுக்குக் கன்று விற்பனை செய்து, அதில் கிடைத்த கூலியில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் டூ முடிச்சு என்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்பதுதான் கனவு. ஆனா, பள்ளிக் கட்டணம் கட்டவே வழி தெரியாததால், என் உறவினர் அளித்த அறிவுரையின் பேரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஆசிரியர் பள்ளியில் படிக்கும்போது, கல்வி உபகரணங்கள் வாங்குவற்குவதற்கும் பகுதிநேரம் வெவ்வேறு இடங்களில் வேலைப் பார்த்தேன்.
1988ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமே அடையாத ஒரு பள்ளியை, அமைதி, பசுமை, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து அதிநவீன கல்வி தொழில்நுட்ப கருவிகளுடன் கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியுடன் கூடிய பள்ளியை உருவாக்குவதுதான் என் கனவு.
அதற்கான வாய்ப்பு 2005ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆனால், நான் எண்ணியதற்கு மாறாக மிக வசதிபடைத்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவி கிடைத்தது. நான் கண்ட கனவு கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, கல்வி அதிகாரியைச் சந்தித்து, இந்த மாறுதலை நிறுத்தி, கல்வியில் எந்த முன்னேற்றமும் அடையாத, ஆசிரியர்களே வெறுத்து ஒதுக்கும் பள்ளிக்கு என்னை மாற்றுதல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கல்வி அதிகாரி, இந்தப் பள்ளிக்கு மாறுதல் செய்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இந்த கிராமத்தில் பள்ளிப்படிக்கும் வயதில், பள்ளிக்கு வராத குழந்தைகள் அதிகம். பெற்றோருக்கு எழுத்தறிவு கிடையாது. எல்லாரும் கூலித் தொழிலாளர்கள். பள்ளிக்கு ஒரு மாணவனை கொண்டு வருவது என்பதே எனக்கு மிகப்பெரிய சவால்.
அனைவருக்கும் கல்வி என்பதைவிட, அனைவருக்கும் தரமான கல்வி என்பதுதான் என் குறிக்கோள். அந்த அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தேன். கிராமக் குழுக் கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்களை வலியுறுத்தினேன். என் ஒருவனால் மட்டும் இது சாத்தியப்படாது என்பதை புரிந்துகொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக்கல்விக்குழு, இளைஞர் மன்றத்தினர், சுயஉதவிக்குழுக்கள், முன்னாள் மாணவர்கள், கல்விக் கொடையாளர்கள் இப்படி ஒவ்வொருவரையும் அணுகி மாணவர்களை பள்ளிக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்து பள்ளிக்கான வளர்ச்சிக்கும் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மாணவர்களுக்கு படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு தகுந்தவாறு கற்பித்தல் முறையை மாற்றினேன். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள்.
எங்கள் கிராமத்தை பொறுத்தவரை கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற்றுக்கும் பொது இடங்கள்தான் கழிப்பறை. எங்கள் மாணவர்கள் பிரசாரத்தின் மூலம் அதனை நிறுத்தினோம். என் சேவையைப் பாராட்டி ஒரு தொண்டு நிறுவனம் நமது கிராமம் விருது அளித்தது. அந்த விருதுக்கான தொகையை வைத்து கிராமத்திற்கு பொதுக் கழிப்பிடம் கட்டினோம்.
பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்குவது எனது கனவு. நண்பர் ஒருவர் தான் பயன்படுத்திவரும் கம்ப்யூட்டர் ஒன்றை முதலில் எங்களுக்குத் தந்தார். அந்த கம்ப்யூட்டரை மாணவர்கள் பயன்படுத்துவதை ஒருநாள் நேரில் பார்த்துவிட்டுச் சென்ற நண்பர், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க 50 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை அளித்தார். அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரின் பெயரில் டி.டி.யாக எடுத்துத் தரச் சொன்னேன். அவரும் ஆட்சியர் பெயரில் எடுத்துக்கொடுத்தார். நமக்கு நாமே திட்டம் மூலம் அந்தப் பணத்தை மூன்று மடங்காக ஆட்சியர் மூலம் பெற்று, அந்தப் பணத்திற்கு முழுவதும் கம்ப்யூட்டர் வாங்கி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு வளர்ந்திருக்கிறது.
இதுதவிர சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன் சில கல்வி உபகரணங்களைப் பெற்று ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை முழுவதும் ரெக்கார்டு செய்து, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு திருப்பி போட்டுக் காட்டுவதன் மூலம் மாணவர்கள் விரும்பி படிக்க ஆரம்பித்தார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஜெராக்ஸ் மிஷின், பிரிண்ட்டர், ஸ்கேனர், எல்லாம் வாங்கி வைத்து, மாணவர்களுக்கு தினமும் நடத்தும் பாடத்தை வாரத்திற்கு ஒரு தடவை முழுஆண்டு தேர்வு போல நடத்தி, அந்த மதிப்பெண்களை உடனடியாக கொடுத்து, அவர்களை ஊக்குவித்து வருகிறோம். இப்போது எங்கள் பள்ளியில் படிக்கத் தெரியாத மாணவர் என்று ஒருவர் கிடையாது என்று பெருமிதப்படுகிறார் 39 வயதில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கருப்பையன்.

No comments:

Post a Comment