Thursday, June 30, 2011

விசாலினிக்கு என்னாச்சு?


சர்வதேச அளவில் சவாலான பல்வேறு கணினித் தேர்வில் வெற்றி பெற்ற திருநெல்வேலியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி விசாலினி தற்போது பள்ளிப் படிப்பை தொடருவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
பொதுவாக மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் 90 -- 110 இருக்கும். இதுவே பில்கேட்ஸுக்கு 160. தென் கொரியாவைச் சேர்ந்த கிம் உங் யாங் என்ற நபருக்கு நுண்ணறிவுத் திறன் - 200. நுண்ணறிவுத் திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர் இவர். ஆனால் விசாலினியின் நுண்ணறிவுத் திறன் 225 என்று புகழ் பெற்ற மருத்துவர்கள் கணித்துள்ளார்கள்.
மைக்ரோசாப்ட் நடத்தும் பொறியியல் மாணவர்களுக்கான எம்.சி.பி. ஆன்லைன் தேர்வில் விசாலினி தேர்ச்சிப் பெற்றுள்ளார். அதேபோல, பி.இ., எம்.இ. மாணவர்களே எழுத சிரமப்படக்கூடிய, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான சிஸ்கோ நடத்தும் மிகக் கடின தேர்வான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் (சிசிஎன்ஏ) ஆன்லைன் தேர்வில் விசாலினி தேர்ச்சிப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு, பாகிஸ்தானைச்சேர்ந்த 12 வயது நிரம்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஷா ஹைதர் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றார் என்ற பெருமையை பெற்றிருந்தார். அந்தச் சாதனையை தற்போது 2011ஆம் ஆண்டு விசாலினிமுறியடித்துள்ளார். படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் விசாலினியின் சாதனைப்பட்டியல் நீள்கிறது. இவ்வளவு சாதனைகளைச் செய்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளிப் படிப்பை தொடருவதில் என்ன சிக்கல் வந்துவிட்டது என்று மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டோம். பிரச்சினைக் குறித்து மாணவியின் தாய், சேதுராகமாலிகா பேச ஆரம்பித்தார்.
விசாலினி பிறந்தது திருநெல்வேலியில்தான். அவளுக்கு இப்போ 11 வயசு ஆகுது. 6ஆம் வகுப்பு படிக்க வேண்டிய அவ, இப்போ எட்டாம்வகுப்பு படிச்சிட்டு இருக்கா. படிப்புல அவ பயங்கர சுட்டி. 2006 - 2007ஆம் கல்வி ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ, அவளுடைய அறிவுத் திறமை, படிக்கும் ஆற்றல் இவற்றையெல்லாம் கவனித்த பள்ளி நிர்வாகம், அவளுக்கு புரோமோஷன் கொடுத்து அந்த ஆண்டு இடைவெளியிலேயே இரண்டாம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார்கள். அதே மாதிரி 2007 - 2008 கல்வி ஆண்டு மூன்றாம் வகுப்புக்கு போன விசாலினிமற்ற மாணவர்களை விட விரைவாகவும், தெளிவாகவும் பாடங்களை படித்ததால், பள்ளி நிர்வாகம் அவளை நான்காம் வகுப்பில் சேர்த்துக்கொண்டது. 2008ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்தாள். பிரச்சினை ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த போதுதான் தொடங்கியது.
2009 ஜூலை மாசம் திடீரென்று விசாலினியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. என்னப் பிரச்சினைன்னு பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, அவளுடைய வயசுக்கு அவ ஆறாம் வகுப்புலதான் படிக்கணும்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. பிள்ளைய அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். விசாலினியின் திறமையை தெரிந்துகொண்ட திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் ஆங்கிலப் பள்ளி நிர்வாகம், எங்களை தொடர்பு கொண்டு, விசாலினியை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன் பேரில் அந்தப்பள்ளி யூனிபார்ம், புத்தகம் எல்லாமுமே புதிதாக வாங்கி, விசாலினியை பள்ளிக்கு அனுப்பினோம். ஸ்கூல்ல சேர்ந்த கொஞ்ச நாளைக்குள் காலாண்டுத் தேர்வு வந்தது. தேர்வு எழுதச் சென்ற மாணவியை, ஆறாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்குப் பதிலாக நான்காம் வகுப்புத் தேர்வை எழுதச் சொல்லி கட்டாயப் படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவளை அடித்து துன்புறுத்தியதால், அந்தப் பள்ளியில் இருந்து விசாலினியை அழைத்து வந்துவிட்டோம்.
அதற்குப் பிறகு மற்றொரு ஆங்கிலப் பள்ளி, விசாலினியை தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், சிறப்பு அனுமதி கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து பெற்று வந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பள்ளியில் அவளை சேர்த்துக்கொண்டார்கள். மகளின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக நாங்களும் ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டோம். தற்போது அந்தப் பள்ளியில் விசாலினி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு சிறப்பு அனுமதி அளிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குநரகம் என்று ஏறாத படிகள் இல்லை. ஆனால், அவளுக்கு அந்த சிறப்பு அனுமதி கடிதம் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. இன்றுவரை தினமும், விஷாலினியிடம் சிறப்பு அனுமதி கடிதத்தைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது பள்ளி நிர்வாகம். பள்ளி திறந்து எல்லா மாணவிகளும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்க, பள்ளியில் கடிதம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்ற அச்சத்தில் இன்னும் என் மகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள் என்று பேசும்போதே கவலையில் அந்தத் தாயின் குரல் உடைந்தது.
விஷாலினியின் நுண்ணறிவுத் திறன் மற்றும் அறிவாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், அவள் தொடர்ந்து படிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விசாலினிபெற்றோரின் கோரிக்றகை.

No comments:

Post a Comment