Thursday, June 30, 2011

’சி-சாட்’ கிளம்பும் புது சர்ச்சை!



கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் படித்து முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவு இனி நிறைவேறாதோ என்ற கவலையை சமீபத்தில் நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் இரண்டாம் தாள் ஏற்படுத்தியுள்ளது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாள் முற்றிலும் பொது அறிவுப் பகுதியாக இருக்கும். இரண்டாம் தாள் முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடமாக அமைந்திருக்கும். இந்த முறை தேர்வு கடந்த ஆண்டு வரையில்தான். ஆனால், இந்த ஆண்டுசிவில் சர்வீசஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (சிசாட்) எனும் புதிய பகுதியை இரண்டாம் தாளில் புகுத்தியிருக்கிறது, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி).
இந்த புதிய முறை சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாள் முற்றிலும் வட இந்திய மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போலவே இருக்கிறது. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாது. தமிழக மாணவர் ஒரு கேள்வியை படித்து புரிந்துகொள்ளும் நேரத்தில், வட மாநில மாணவர்கள் மூன்று கேள்விகளுக்கு எளிதாக விடையளித்துவிடுவார்கள். காரணம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நிகராக அதே கேள்வியை இந்தி மொழியில் கொடுத்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எத்தனை தூரம் சரி என்பதை தெரிந்துகொள்ள சென்னையில் இயங்கிவரும் பிரபலமான சில ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநர்களை தொடர்பு கொண்டோம்.
கார்த்திகேயன் (இயக்குநர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்) : இந்தக் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வின் புதிய முறை வரவேற்கத்தக்கது. ஆனால், இரண்டாம் தாள் முற்றிலும் தமிழக மாணவர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. இரண்டாம் தாள் பொது அறிவு மற்றும் ஆங்கிலம் என்று பிரிக்கப்பட்டிருக்கும். யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள நிபந்தனை அறிக்கையில், இரண்டாம் தாளில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை சோதிக்கும் வகையில் இடம்பெறும் கேள்விகளுக்கு இந்தி மொழிபெயர்ப்பு இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது வெறும் 8 கேள்விகள்தான். ஆனால், பொது அறிவு கேள்விகள் முற்றிலும் பத்தி வடிவில் இருந்தது. இதை புரிந்துகொள்ள ஆங்கிலப் புலமை மிக மிக அவசியம். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு முற்றிலும் இந்தி அர்த்தத்துடன் கேள்விகள் அமைக்கப்பட்டிருந்தது, வருத்தம் அளிக்கிறது. இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை யு.பி.எஸ்.சி.யிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். அதற்கான பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இந்தக் கேள்வித்தாள், இந்தி பேசும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மட்டுமே அமைந்துள்ளது. சாமானிய மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வை இனி எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம் கல்வித் திட்டம் மாற வேண்டும். அல்லது யு.பி.எஸ்.சி. தேர்வாணையம், இந்தி மொழியைப்போல் மாநில மொழிகளுக்கும் கேள்வித்தாளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.
கணேஷ் (இயக்குநர், கணேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி): சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டாம்தாளில் இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பகுதி மற்றும் பொது அறிவுப் பகுதி. பொது அறிவுப் பகுதியில் கேட்கப்பட்டிருந்த ஆங்கில கேள்விகளுக்கு மட்டும்தான் இந்தியில் அப்படியே மொழிபெயர்த்து கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பகுதிக்கு இணையாக இந்திப் பகுதி கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாம் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளும் முற்றிலும் ஆங்கில மொழி, இந்தி மொழி இரண்டிலும் கேட்கப்படுவது வழக்கம். இந்த வரைமுறையை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மட்டும் தளர்த்திக்கொள்ள, எப்படி கோர முடியும் என்றார்.
பிரபாகர் (இயக்குநர், பிரபா ஐ.ஏ.எஸ். அகாதெமி): மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகை தேர்வுகளின் கேள்வித்தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது சிவில் சர்வீஸ் கேள்வித்தாளில் முதல் இரண்டு தாள்களின் கேள்விகளுமே ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் கேட்கப்பட்டுள்ளன. இப்போது சர்ச்சை எழுந்துள்ளது, இரண்டாம் தாளில் மட்டும்தானே தவிர முதல் கேள்வித்தாளில் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வைத் தவிர யுபிஎஸ்சிஇ நடத்தும் மற்றத் தேர்வுகளில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்தியிலும் மொழிபெயர்ப்பு இருக்கும். ஆனால், அந்தக் கேள்விகள் அனைத்தும் பொதுவான கேள்விகள். அதுவும் ஓரிரு வரிகளில் முடிந்துவிடும். அறிவியல், சமூகம், தேசியம் அல்லது கணிதம் சார்ந்த கேள்விகளாக மட்டும் இருக்கும். அதனால், எந்த மாநிலத்து மாணவர்களும் கேள்விகளை எளிதில் உள்வாங்கிக் கொண்டு விடையளிக்க முடியும்.
ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் தாளில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில் 74 கேள்விகள் மெண்ட்டல் எபிலிட்டி மற்றும் யோசித்து விடையளிக்கும் கேள்விகளாகவே அமைந்திருந்தது. மெண்ட்டல் எபிலிட்டி கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்கள் ஆங்கில அறிவில் புலமை பெற்றவர்களாக இருப்பதோடு, கணிதத்திலும் கை தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். அதேபோல 34 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் படித்து பொருள் புரிந்து கொள்வதற்கே ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் தடுமாறிப் போகும் அளவிற்கு கடினமான கேள்விகளாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வகை கடின வகை கேள்விகள் அனைத்தும், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அப்படியென்றால், அந்த வகை கேள்விகளை ஒருமுறை படித்த மாத்திரத்திலேயே இந்தி பேசும் மாணவர்கள் புரிந்துகொண்டு எளிதில் விடையளித்திட முடியும்தானே. இதுதவிர மாணவர்களின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் எட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விகள் எந்த மொழியினரும் எளிதாக பொருள் கொள்ளும் வகையில் மிக எளிதாக கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் இந்தக் கேள்வித்தாள் முழுக்க முழுக்க இந்தி பேசும் வட மாநில மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது போல் தெரிகிறது. இந்தக் கேள்வித்தாளை கிராமத்திலிருந்து ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று கனவில் வந்து எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக விடையளிக்க முடியாது.
சிவில் சர்வீஸ் தேர்விற்கு சிறப்பாக படித்து, பயிற்சி எடுத்திருக்கும் மாணவர்கள், இந்தக் கேள்வித்தாளில் 70 சதவீத கேள்விகளுக்கு கூடசரியாக விடையளித்திட முடியாது. ஆனால், வெகு சுமாராக பயிற்சி எடுத்துவிட்டு இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் இந்தி மாணவர்களால், வெகு சாதாரணமாய் 80 சதவீத கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில்தான் சிவில் சர்வீஸ் இரண்டாம் கேள்வித்தாள் அமைந்திருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் முதல்நிலைத் ரேத்வுதான் தடைக்கல். இதில் ஒருவர் தேர்ச்சிப் பெற்றுவிட்டால், எளிதாக மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்றுவிடலாம். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவி முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். ஆனால், யு.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ள இந்த சிசாட் கேள்வித்தாள், இந்த வெற்றிப் படிக்கட்டுக்கு தடைக்கல்லை வைத்தது போல் மாணவர்கள் உணருகிறார்கள். எனவே யுபிஎஸ்சி இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
பல்லாயிர மாணவர்களின் லட்சியத் தேர்வாக விளங்குவது சிவில் சர்வீஸ் தேர்வு. தேசம் முழுவதும் பல்வேறு கனவுகளுடன் இத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எல்லா மாணவர்களும், எதிர்கொள்ளும் வகையில் எவ்வித பாரபட்சமின்றி கேள்வித்தாளை வடிவமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ். கனவு காணும் மாணவர்களின் கனவு.

No comments:

Post a Comment