Thursday, June 30, 2011

கிராபிக்ஸ் ஓவியப் போட்டி



பிரிண்ட் துறையில் படிக்கும் மாணவர்கள், அனிமேஷன் துறையில் கைத்தேர்ந்த மாணவர்களுக்கான போட்டி இது. சீன நாட்டில் ஹாங்காங் பகுதியில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பணப் பரிசு மட்டுமல்லாமல், இரண்டு மாதம் ஹாங்காங்கில் தங்குவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது, ஹாங்காங் கிராபிக் ஓவியப் போட்டியை நடத்தும் ஷின் - இ- டாய் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு கம்ப்யூட்டர் சாதனத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால், அச்சுத் துறை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அச்சு ஏற்றுவதிலிருந்து, அதை புத்தக வடிவத்திற்கு கொண்டு வருவதுவரை பல்வேறு புதுமைகள் வந்துவிட்டன. அச்சுத் துறையிலேயே 2டி, 3டி, 4டி என்று பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதுமையான ஒரு படைப்பை மாணவர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பலாம்.
படைப்பை அனுப்பும்போது, அது எம்மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்பு முற்றிலும் சொந்தமாக இருக்க வேண்டும். படைப்பை நகல் எடுத்து அனுப்பக் கூடாது. படைப்பு எந்த வகையிலும் சேதமாகாதவாறு அனுப்ப முயற்சியுங்கள். படைப்பிற்கான இன்னொரு பிரதியை பிடிஎஃப் பார்மெட்டில் சிடியில் அனுப்ப மறந்துவிடாதீர்கள்.
மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் அனுப்பலாம். அல்லது கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் அனுப்பலாம். சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் கிராபிக் ஓவியத்திற்கு இந்திய மதிப்பிற்கு ரூ.45 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறந்த படைப்பாக உங்கள் படைப்பு காட்சிக்கு வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் 2012 ஆம் ஆண்டு இரண்டு மாதங்கள் ஹாங்காங்கில் தங்கியிருக்கும் செலவு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட் 15.
படைப்பை எப்படி அனுப்ப வேண்டும், அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது போன்ற தகவல்களை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு :http://www.open-printshop.org.hk/submission2011/pdf/xyd_form_eng.pdf

No comments:

Post a Comment